தீவிரவாத ஆதரவாளர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய 44 சிறப்பு அதிகாரிகள் நியமனம்: மத்திய அரசு அதிரடி அறிவிப்பு

புதுடெல்லி: தீவிரவாதிகளுக்கு உதவும் ஆதரவாளர்கள், தேச விரோத செயல்களில் ஈடுபடுகிறவர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்ய, 44 சிறப்பு அதிகாரிகளை மத்திய அரசு நியமித்துள்ளது. இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: தீவிரவாதத்துக்கு உதவி செய்பவர்கள், நாட்டின் நலனுக்கு எதிராக செயல்படுவர்களின் நிதி ஆதாரங்களை முடக்குவதுடன், அவற்றை பறிமுதல் செய்யும் நடவடிக்கையிலும் மத்திய அரசு தற்போது கவனம் செலுத்தி வருகிறது. இதற்காக, 44 சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இவர்கள் மத்திய அரசு, மாநில அரசுகள், யூனியன் பிரதேச அரசுகள் ரிசர்வ் வங்கி மற்றும் செபி போன்ற பல்வேறு முக்கிய அமைப்புகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். இந்த பறிமுதல், ‘சட்ட விரோத நடவடிக்கை தடுப்பு சட்டம் 1967’-ன் படி செயல்படும். இந்த சட்டப்பிரிவு 51ஏ-ன் அடிப்படையில் சொத்து மற்றும் நிதி பறிமுதலை அதிகாரிகள் மேற்கொள்வார்கள். தீவிரவாத செயல்களில்  ஈடுபடுவோருக்கு உதவி செய்பவர்கள், உதவி செய்வதாக சந்தேகப்படுகிறவர்களின் சொத்துகளை முடக்கவோ, நிறுத்தி வைக்கவோ, கைப்பற்றவோ இவர்களால் முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: