கூடலூர் அருகே வணிக வளாகம் கட்ட மண் எடுப்பு: தொடர் மழை காரணமாக மண்மேடு சரிந்து அந்தரத்தில் தொங்கும் வீடுகள்...மக்கள் வேதனை..!!

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே வணிக வளாகம் கட்டுவதற்கு மண் எடுக்கப்பட்ட இடத்தில் மழை காரணமாக மண்மேடு சரிந்ததால் வீடுகள் எந்த நேரத்திலும் இடிந்து விழும் சூழலில் உள்ளது. உதகை, கூடலூர் பிரதான சாலை ஓரத்தில் உள்ள நடுவட்டம் மேட்டுப்பகுதியில் ஏராளமான வீடுகள் உள்ளன. நடுவட்டம் பேருந்து நிலையத்தில் வணிக வளாகம் பணிகளுக்காக இந்த மேட்டுப்பாங்கான இடங்களில் இருந்து மண் எடுக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று பெய்த கனமழையால் மேட்டுப்பகுதியில் மண்சரிவு ஏற்பட்டது.

 இதனால் வீடுகளில் இருந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு வெளியேறினர். மண் திட்டு சரிந்ததால் எப்போது வேண்டுமானாலும் வீடுகள் இடிந்துவிடும் சூழலுடன் உள்ளது. வீடுகள் சரிந்து விழாமல் தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குடியிருப்பு வாசிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர். இதுகுறித்து அங்குள்ள மக்கள் தெரிவித்ததாவது, அதிகாலை சுமார் 4 மணி அளவில் வீடுகளில் திடீரென அதிர்வு ஏற்பட்டது. பதறியடித்து வந்து பார்த்தால் மேட்டுப்பகுதியில் மிகப்பெரிய மண் சரிவு ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து வீடுகளில் இருந்து வெளியே வரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டதால் வீடுகளின் பின்புறம் இடித்து வெளியே வரவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டோம். தற்சமயம் அருகில் உள்ள ஆலயத்தில் தஞ்சம்புகுந்துள்ளோம். வணிக வளாகம் 2018-ம் ஆண்டு கட்ட தொடங்கப்பட்டது. ஆனால் இன்னும் அதற்கான பணிகள் நிறைவடையாமல் உள்ளது. தற்போது மழை காலம் என்பதால் ஆங்காங்கே மண்சரிவு ஏற்படுகிறது. எங்களுடைய வீடு எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே இந்த வணிக வளாக பணிகள் விரைவில் முடிவடைய நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கைவிடுத்தனர்.

Related Stories: