அமெரிக்காவுல கேட்குறாக... ஐரோப்பாவுல கேட்குறாக... இப்பதான் தெரியுது நம்ம ஊரோட மவுசு: மஞ்சள் ஏற்றுமதி அதிகரிப்பு 4 சதவீதம் விலை உயர்ந்தது

புதுடெல்லி: கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வெளிநாடுகளிலும் மஞ்சளை தேடத் தொடங்கி விட்டனர். இதனால், இந்தியாவில் இருந்து மஞ்சள் ஏற்றுமதி கடந்த சில மாதங்களாக அதிகரித்து உள்ளது. கொரோனா கோரத்தாண்டவம் இன்னும் நின்றபாடில்லை. எதற்கும் அஞ்சாதவர் போல் காட்டிக்கொண்ட அமெரிக்க அதிபர் டிரம்ப்பையும் முகக்கவசம் மாட்ட வைத்த சாதனை அதற்கு உண்டு. உலக அளவிலும், இந்திய அளவிலும் தினம் தினம் கொரோனா பாதிப்பும், பலிகளும் புதிய உச்சத்தைதான் எட்டி நிற்கின்றன. தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் போட்டி இப்போது தொடங்கியிருக்கிறது. இந்தியா உள்பட ஒவ்வொரு நாடும் களத்தில் குதித்து விட்டன. ‘மருந்து இப்போ வந்துடும், அப்போ வந்துடும்...’ என்ற நிலைதான் உள்ளது. எனவே, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இயற்கையை நாடத் தொடங்கி விட்டனர் உலக மக்கள்.

ஆனால், இயற்கையாகவே தமிழக உணவு பழக்க வழக்கங்களில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மஞ்சள், இஞ்சி, பூண்டு, சீரகம் உள்ளிட்ட பொருட்களை சமையலில் சேர்ப்பது வழக்கம். அதுவும் கொரோனா காலத்தில் மஞ்சள், இஞ்சி, எலுமிச்சைக்கு எக்கச்சக்க மவுசு. இதை நாம் தினசரி உணவு வகைகளில் பயன்படுத்தி வந்ததால் மற்ற நாடுகளைப்போல் இங்கு கொரோனாவால் அதிக பாதிப்பு இல்லை. 130 கோடிக்கும் மேல் மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் எப்படி பாதிப்பும், பலியும் இவ்வளவு குறைவாக இருக்கின்றன என்று உலக நாடுகள் ஆராய்ந்து பார்த்த பின்னர்தான், மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மஞ்சள் மகத்துவம் அன்னியருக்கு தெரியவந்திருக்கிறது.

தரமான மஞ்சள் விளைச்சலில் தமிழ்நாட்டில் ஈரோடு பகுதியும், தெலங்கானாவின் நிஜாமாபாத் பகுதியும்தான் சாம்பியன்கள். நாடு முழுவதும் மஞ்சள் ஏற்றுமதி இந்த இரண்டு நகரங்களில் இருந்துதான் நடைபெறும். இப்போது, கொரோனா காலம் என்பதால் கூடுதல் ஏற்றுமதி நடக்கிறது. இந்த நேரத்தில் உலகம் முழுவதும் இருந்தும் தரமான மஞ்சள் கேட்டு இந்த இரண்டு நகரங்களுக்கும் ஒரே போன்கால்கள். உபயம் கொரோனா. வேறு என்ன மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள் நமது மஞ்சள் வியாபாரிகள். ஒரு நாள் அமெரிக்காவில் இருந்து ஆர்டர் வருகிறது, இன்னொரு நாள் ஐரோப்பாவில் இருந்து ஆர்டர் வருகிறது.

ஏன் மத்திய கிழக்கு நாடுகள், தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் இருந்தும் பல்க் ஆர்டர்கள் கிடைத்து இருப்பதால் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள் அவர்கள். இங்கிலாந்து, ஜெர்மனி, ஹாலந்து, துபாய், மலேசியா, ஈரான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்தும் மஞ்சள் ஏற்றுமதி செய்யச்சொல்லி இன்ப அதிர்ச்சி கொடுத்து இருக்கிறார்கள். வங்கதேசத்திற்கு ரயில் பெட்டிகளில் உடனே அனுப்பும்படி அன்பு கட்டளை போட்டு இருக்கிறார்கள். வழக்கமாக ஒரு கிலோ மஞ்சள் விலை கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 4 சதவீத விலை உயர்ந்து ரூ.60 முதல் ரூ.62க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. செப்டம்பருக்குள் இன்னும் 10 சதவீத விலை அதிகரிக்கும் என்று கருத்து தெரிவித்து உள்ளனர். இப்போ தெரியுதா? எங்கள் மஞ்சளின் மகத்துவம் என்று சொல்லி சிரிக்கிறார்கள் மஞ்சள் வியாபாரிகள்.

* உலகளவில் 75 சதவீத மஞ்சள் உற்பத்தி இந்தியாவில்தான் நடக்கிறது.

* 2019ம் ஆண்டு இறுதியில் 1,01,500 டன் மஞ்சள் ஏற்றுமதி நடந்துள்ளது.

* 2020-21ல் மஞ்சள் ஏற்றுமதி 15 சதவீதம் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

* ஆயுஷ் அமைச்சகமும் மஞ்சள் கலந்த பானங்களை அருந்த அறிவுறுத்தி இருப்பதால், இந்தியாவிலும் விற்பனை அமோகமாக உள்ளது.

Related Stories: