மேய்ச்சல் நிலமாக மாறிய திருமூர்த்தி அணை

உடுமலை: உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணை 60 அடி உயரம் கொண்டது. பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையில் இருந்து, சர்க்கார்பதி மின் நிலையம் வழியாக, கான்டூர் கால்வாய் மூலம் அணைக்கு தண்ணீர் கொண்டு வந்து நிரப்பப்படுகிறது. பிஏபி பாசன திட்டத்தில் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 4 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. 4 மண்டலங்களாக பிரித்து தண்ணீர் வழங்கப்படுகிறது.

உடுமலை நகரம் உட்பட பல்வேறு கூட்டு குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்படுகிறது. பாசனத்துக்கு தண்ணீர் திறப்பதற்கு முன்பாக அணையில் தண்ணீர் கொண்டுவந்து நிரப்பப்படும். தென்மேற்கு பருவமழை சீசனில் சோலையாறில் பெய்யும் மழை காரணமாக அதிகளவு நீர்வரத்து இருக்கும்.

தற்போது ஜூலை கடைசி வாரமாகியும் தென்மேற்கு பருவமழை துவங்கவில்லை. இதனால், பிஏபி தொகுப்பு அணைகளில் தண்ணீர் குறைவாக உள்ளது.திருமூர்த்தி அணையில் நேற்று 20 அடிக்கு மட்டுமே நீர்மட்டம் இருந்தது. இதனால், அணைப்பகுதி மேய்ச்சல் நிலமாக மாறியுள்ளது. தண்ணீர் இல்லாத பகுதியில் புற்கள் வளர்ந்துள்ளன. இதனால், ஆடு, மாடுகளை விவசாயிகள் மேய்ச்சலுக்கு விட்டுள்ளனர்.

Related Stories: