கேரள தங்கக்கடத்தல் கும்பலுக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு!: தேசிய பாதுகாப்பு முகமை விசாரணையில் அம்பலம்..!!

திருவனந்தபுரம்: கேரள தங்கக்கடத்தல் கும்பல் தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருந்தது என்.ஐ.ஏ. விசாரணையில் அம்பலமாகியுள்ளது. திருவனந்தபுரம் விமான நிலையத்தில் ஐக்கிய அரபு அமீரகம் துணை தூதர் மூலம் 30 கிலோ தங்கம் கடத்தப்பட்ட புகாரில் சரித் குமார், அம்மாநில தகவல் தொழில்நுட்பத்துறையில் பணியாற்றிய ஸ்வப்னா உள்ளிட்டோரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர். அதேநேரத்தில் இந்த விவகாரத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள், அவர்களிடம் நடத்திய விசாரணையில் தூதரக அதிகாரிகள் மூலம் தொடர்ந்து தங்கம் கடத்தியது அம்பலமானது. இந்த வழக்கில் கேரள மாநில முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கரனுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்ததை அடுத்து, அவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.. கொச்சியில் உள்ள தேசிய பாதுகாப்பு முகமை அலுவலகத்தில் விசாரணைக்காக அவர் இன்று மீண்டும் ஆஜராகிறார்.

இந்நிலையில் தங்கக்கடத்தல் கும்பலை சேர்ந்த ரமீஸ் ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளது. இவர் மூலம் அந்த அமைப்புக்கு கடத்தல் கும்பல் நிதியுதவி அளித்ததும் தெரியவந்துள்ளதாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடத்தும் விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல் வெளியாக வாய்ப்புள்ளது.

Related Stories: