கடலூரில் காற்றில் பறந்த சமூக இடைவெளி: மீன்பிடி துறைமுகங்களில் மக்கள் அலைமோதியதால் கொரோனா பரவும் அபாயம்!!!

சென்னை: நாளை தமிழகம் முழுவதும் தளர்வுகளின்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் நிலையில், இன்றே மீன் வாங்குவதற்கு அசைவ பிரியர்களின் கூட்டம் அலைமோதுகிறது. அதிலும் குறிப்பாக சென்னை காசிமேடு, பட்டினப்பாக்கம், கடலூர் மீன்சந்தை உள்ளிட்ட இடங்களில் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது. காசிமேடு மீன்சந்தையில் அதிகாலையிலிருந்தே ஏராளமானோர் குவிந்துள்ளனர். குறிப்பாக மொத்த மீன்விற்பனையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், காசிமேடு மீன் சந்தையில் அதிகளவு பொதுமக்கள் கூடியதால் மிகவும் நெரிசலுடனே காணப்படுகிறது. இந்த நிலையில், கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

இதனைத்தொடர்ந்து, சென்னை பட்டினப்பாக்கம் மீன் சந்தையிலும் பொதுமக்கள் அதிகாலையிலிருந்தே சமூக இடைவெளியை பின்பற்றாமல் மீன் வாங்க குவிந்ததால், கொரோனா தொற்று ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. அதே நேரத்தில், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த அதிகளவில் காவலர்களை பணியமர்த்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. இதேபோல, கடலூர் மீன்பிடி துறைமுகத்திலும் அதிகாலை முதல் சிறு, குறு மீன் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் அதிகளவில் குவிந்தனர். நாளை முழு ஊரடங்கை முன்னிட்டு, மீன்பிடி துறைமுகங்களும், மீன் கடைகளும் இயங்காது என்பதால், கடலூர் மாவட்ட மக்கள் மீன்பிடிதுறைமுகங்களில் அதிகளவில் குவிய தொடங்கியுள்ளனர். மேலும், சமூக இடைவெளி இன்றியும், முககவசம் அணியாமலும் மக்கள் கூடியதால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Related Stories: