மாநகராட்சி என போலியாக ஸ்டிக்கர் ஒட்டி சாலையில் கழிவுகளை கொட்டிய தனியார் டிராக்டர் சிறைபிடிப்பு: போலீசார் விசாரணை

சென்னை: கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டை சுற்றுப் பகுதிகளில் உள்ள ஊராட்சிகளில் நாள்தோறும் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் இருந்து சேகரிக்கப்படும் குப்பை, கழிவுகள் கவரப்பேட்டை – சத்தியவேடு சாலையில் சாலையோரத்தில் கொட்டப்படுகின்றன. இங்கு, பல ஊராட்சிகளைச் சேர்ந்த கழிவுகள் கொட்டப்படுவதாக புகார் எழுந்த நிலையில், கடந்த வாரம் ஊராட்சி நிர்வாகம் சார்பில் முழுமையாக குப்பை கழிவுகள் அகற்றப்பட்டு அந்த இடம் சீரமைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அதே இடத்தில் நேற்று முன்தினம் இரவு, சென்னை மாநகராட்சி என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட டிராக்டர் மற்றும் பதிவு எண் இல்லாத டிரெய்லர் மூலம் கெட்டுப்போன உணவுப் பொருட்களை மேற்கண்ட இடத்தில் சிலர் கொட்டியுள்ளனர். தகவல் அறிந்த பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு சென்று டிராக்டரை மடக்கிப் பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது சென்னை மாநகராட்சி என்ற பெயர் கொண்ட டிராக்டருக்கு கவரப்பேட்டையில் என்ன வேலை எனவும், இந்த கெட்டுப்போன உணவு கழிவுகள் எங்கிருந்து கொண்டுவரப்பட்டது எனவும் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

தகவல் அறிந்த கவரப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தி டிராக்டரை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரித்தனர். அதில், அந்த டிராக்டர் சென்னை மாநகராட்சிக்கு சொந்தமானது இல்லை எனவும், தனியார் வாகனம் எனவும், விதிமீறி ஸ்டிக்கர் ஒட்டப்பட்டதும் தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் இங்கு கொட்டப்படும் குப்பை கழிவிலிருந்து வெளியேறும் துர்நாற்றம் காரணமாக சுவாசப் பிரச்னையும், கொசுக்கள் உள்ளிட்ட பூச்சிகளின் தொந்தரவும் இருப்பதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர். இதுகுறித்து கவரப்பேட்டை காவல் நிலையத்தில் அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் சரவணன் என்பவர் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post மாநகராட்சி என போலியாக ஸ்டிக்கர் ஒட்டி சாலையில் கழிவுகளை கொட்டிய தனியார் டிராக்டர் சிறைபிடிப்பு: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: