இந்நிலையில் கூடுதல் சிறப்பாக உயர் அழுத்த பிராணவாயு இயந்திரத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடந்த மாதம் இங்கு தொடங்கி வைத்தார். நீண்ட நாட்களாக குணமாகாமல் இருக்கும் காயங்களை சரி செய்ய நோயாளிகளுக்கு உயர் அழுத்த பிராணவாயு சிகிச்சை அளிக்கப்படுகிறது. உயர் அழுத்த பிராணவாயு சிகிச்சை மையத்தில் உள்ள இந்த கருவி, மூடப்பட்ட குளிர்சாதன படுக்கையுடன் கூடிய பெட்டி வடிவில் உள்ளது. தீக்காயம் அல்லது மின்சாரம் தாக்கிய காயங்கள் ஏற்பட்டுள்ள நோயாளிகளை காயத்தின் தன்மையைப் பொறுத்து இதில் நாள்தோறும் குறிப்பிட்ட மணி நேரம் படுக்க வைக்கும் போது தீக்காயங்கள் விரைவில் குணமாகிறது.
உயர் அழுத்தம் மிக்க ஆக்சிஜனை தோலுக்கு கொடுக்கும்போது அதன் குணமாகும் தன்மை அதிகரிக்கிறது. தீக்காயங்களோ, மின்சாரம் தாக்கிய காயங்களோ மருந்துகள் மூலமாக குணமாக ஆறு மாதம் ஆகும். அப்படியும் காயங்களின் தழும்புகள் ஆறாது இருக்கும். ஆனால் இந்த சிகிச்சை முறையில் தழும்புகளையும் குணப்படுத்தக்கூடிய அளவிற்கு தோலில் முன்னேற்றம் இருக்கும். படுத்திருக்கும் நோயாளியின் பொழுதுபோக்கிற்காக தொலைக்காட்சியில் படம் ஒளிபரப்பாவதோடு மட்டுமல்லாது மருத்துவர்களிடமும் உள்ளே இருந்து பணியாளர்கள் பேச முடியும்.
கடந்த ஒரு மாதத்தில் 60க்கும் மேற்பட்ட நபர்கள் இதன் மூலம் பயனடைந்துள்ளதாக தீக்காயப்பிரிவு தலைவர் நெல்லையப்பர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: தீ விபத்தால் பாதிக்கப்பட்ட நோயாளி கண்ணாடி பெட்டியில் வைத்து முழுவதுமாக மூடப்படுவார். பின்னர், உயர் அழுத்த பிராண வாயுவை கண்ணாடி பெட்டியில் செலுத்தி சிகிச்சை தொடங்கும்.
கருவியின் உள்ளே இருக்கும் நோயாளியிடம் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் வெளியில் இருந்து சிறிய மைக் மூலம் தொடர்பு கொண்டு பேசுவார்கள். ஒரு நாளுக்கு 5 முறை சிகிச்சை என கிட்டத்தட்ட 75 முறை இந்த இயந்திரம் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ரூ.1 கோடியில் கடந்த மாதம் தொடங்கப்பட்ட இந்த சிகிச்சை மூலம் 60க்கும் மேற்பட்ட நபர்கள் பயனடைந்துள்ளனர். உயர் அழுத்த பிராணவாயு சிகிச்சை நோயாளிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
The post கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீக்காயமடைந்த 60 நோயாளிகளுக்கு உயர் அழுத்த பிராணவாயு சிகிச்சை: மருத்துவர்கள் தகவல் appeared first on Dinakaran.