பாரிமுனை பேருந்து நிலையம் அருகே 4 மாடி கட்டிடம் இடிந்து விபத்து: 3 பேர் காயம்

தண்டையார்பேட்டை: பாரிமுனை பேருந்து நிலையம் அருகே 4 மாடி கொண்ட பழைய விடுதி கட்டிடம் இடிந்ததில், 3 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து பூக்கடை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பாரிமுனை பேருந்து நிலையம் அருகே உள்ள டிஎன்பிசி சாலையில் மருத்துவ கல்லூரியின் முதுநிலை மாணவர்கள் விடுதி உள்ளது. இந்த விடுதி கட்டிடம் பழுதடைந்ததால் இங்கிருந்த மாணவர்கள் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டனர். பின்னர் 4 மாடி கொண்ட இந்த கட்டிடத்தை இடிப்பதற்கு முடிவு செய்யப்பட்டது. அதற்கான பணிகள் நேற்று நடந்துகொண்டிருந்தன. அப்போது திடீரென கட்டிடம் தானாகவே இடிந்து விழுந்தது.

அப்போது, சாலையில் சென்ற 3 பேர் இடிபாடுகள் விழுந்ததால் காயமடைந்தனர். தகவலறிந்து பூக்கடை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவலறிந்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்து, சம்பவம் குறித்து கேட்டறிந்தார். இடிந்து விழுந்த இந்த மருத்துவ கல்லூரியின் விடுதி இடத்தில் நீதிமன்ற வளாகம் வருவதாக அமைச்சர் தெரிவித்தார். இந்த கட்டிடம் இடிக்கப்படுவதாக எந்தவித முன்னறிவிப்பும் இல்லை என சாலையோரங்களில் வசிக்கக்கூடிய குடியிருப்புவாசிகள் அமைச்சரிடம் தெரிவித்தனர். இதனால் பாரிமுனை பேருந்து நிலையம் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

The post பாரிமுனை பேருந்து நிலையம் அருகே 4 மாடி கட்டிடம் இடிந்து விபத்து: 3 பேர் காயம் appeared first on Dinakaran.

Related Stories: