ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே ஏரியில் மண் எடுப்பதை கண்டித்து, கிராம மக்கள் லாரிகளை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பெரியபாளையம் அருகே ஆரணி பேரூராட்சியில் 250 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியை தூர்வாரி கரையை பலப்படுத்த ₹50 லட்சம் செலவில் குடிமராமத்து பணிகள் செய்ய முடிவு செய்யப்பட்டு கடந்த 20 நாட்களாக பணிகள் தொடங்கின. இந்நிலையில், மதகுகள் அமைப்பதற்காக ஏரியின் நடுவில் பொக்லைன் இயந்திரம் மூலம் மண் எடுக்கப்பட்டது. இதையறிந்த, அப்பகுதி மக்கள், “ஏரியில் மண் எடுக்கக்கூடாது. ஏரி கரையை உடைக்க கூடாது” என்று வலியுறுத்தி மண் எடுத்த லாரிகளை சிறைப்பிடித்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
