சுதந்திர தினவிழாவில் தூய்மை பணியாளர்களை கவுரவப்படுத்த வேண்டும்: மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு

புதுடெல்லி: அடுத்த மாதம் நடைபெறும் சுதந்திர தின விழாவில் மக்கள் கூட்டத்தை தவிர்க்குமாறு மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சம் அறிவுறுத்தி உள்ளது. நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்று பரவல் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில், வருகிற 15ம் தேதி சுதந்திர தின கொண்டாட்டத்தின்போது மாநிலங்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. இது தொடர்பாக உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சுதந்திர தின விழா கொண்டாட்டங்களில் மக்கள் கூட்டத்தை தவிர்க்க வேண்டும். இதில் பங்கேற்கும் அனைவரும் முகக்கவசம் அணிந்திருப்பதையும், தனி மனித இடைவெளியை கடைப்பிடிப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.

விழாவில் கொரோனா பணியில் ஈடுபடும் மருத்துவர்கள், சுகாதார துறையினர் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட வேண்டும். அவர்களின் சேவைகளுக்காக பாராட்டு தெரிவிக்கப்பட வேண்டும். அதேபோல், கொரோனா பாதித்து குணம் அடைந்தவர்களையும் விழாவில் கலந்து கொள்ளும்படி செய்ய வேண்டும்.  விழாவில் பங்கேற்க முடியாதவர்களையும் விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் சென்றடையும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்,’ என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Related Stories: