தமுக்கத்தில் ஸ்மார்ட் சிட்டி பணிக்கு தடை கோரி வழக்கு: மாநகராட்சி கமிஷனர் பதிலளிக்க உத்தரவு

மதுரை: தமுக்கம் மைதானத்தில் நடக்கும் ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்கு தடை கோரிய வழக்கில், மாநகராட்சி கமிஷனர் பதிலளிக்க வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை, மீனாம்பாள்புரத்தைச் சேர்ந்த நேதாஜி கார்த்திகேயன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: புராதன நகரமான மதுரையில் பழமையின் அடையாளமாக கோயில்கள், கல்வெட்டுகள், சமணர் படுகைகள் உள்ளிட்ட வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் அதிகளவில் உள்ளன. கடந்த சில ஆண்டுகளாக மதுரையின் அடையாள சின்னங்கள் ஒவ்வொன்றாக அழிக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் வணிக வளாகம் ஏற்படுத்துவதற்காக பாரம்பரியமான தமுக்கம் மைதானத்தை அழிக்கும் பணிகள் நடந்து வருகிறது.

இந்த மைதானம் 350 ஆண்டுக்கு முன் ராணி மங்கம்மாவால் உருவாக்கப்பட்டது. 1670ல் தனது அரண்மனையை கட்டிய ராணி மங்கம்மா, குதிரைகள், யானை ஓட்டம், போர் பயிற்சி, வீர விளையாட்டுகள் அரங்கேற்றுவதற்காக சுமார் 10 ஏக்கரில் தமுக்கம் மைதானத்தை உருவாக்கினார். அரண்மனை, அருங்காட்சியமாக மாற்றப்பட்டதும், தமுக்கம் மைதானம் மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த மைதானத்தில் ஆண்டுதோறும் சித்திரை பொருட்காட்சி, புத்தக கண்காட்சி உள்ளிட்டவை நடத்தப்படும். இவற்றில் பங்கேற்க தென்மாவட்டம் முழுவதிலும் இருந்து ஏராளமானோர் வருவர். 1981ல் உலகத்தமிழ் மாநாடு நடந்தது.

இந்த மைதானத்தில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் துவக்கப்பட்டுள்ளன. இதற்காக டெண்டர் விடப்பட்டுள்ளது. கூட்டரங்கு, உணவுக்கூடம், வாகன நிறுத்தங்கள் உள்ளிட்டவை அமைய உள்ளன. பணிகள் முடிந்து பெரியளவிலான வணிக வளாகம் செயல்படும். சித்திரை பொருட்காட்சி நடத்தப்படாத நிலை ஏற்படும். மதுரையின் அடையாளம் அழியும் நிலை ஏற்படும். எனவே, பாரம்பரியத்தை காத்திடும் வகையில் ஸ்மார்ட் சிட்டி பணிகளை நிறுத்தவும், தொடர்ந்து மக்கள் பயன்பாட்டில் இருக்க வேண்டுமெனவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியுள்ளார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், பி.ராஜமாணிக்கம் ஆகியோர், மனுவிற்கு மதுரை மாநகராட்சி கமிஷனர் மற்றும் மதுரை கலெக்டர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 27க்கு தள்ளி வைத்தனர்.

Related Stories: