கேரள தங்கம் கடத்தல் வழக்கு அமீரக தூதரகத்துடன் தொடர்பில் இருந்த ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு சிக்கல்: என்ஐஏ விசாரணை தீவிரம்

திருவனந்தபுரம்: சட்டத்திற்கு புறம்பாக ஐக்கிய அமீரக தூதரகத்துடன் நெருங்கிய தொடர்பில் இருந்த ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை விசாரணை வளையத்திற்குள் கொண்டுவர என்ஐஏ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். கேரள மாநிலத்தில் தங்கம் கடத்தல் வழக்கில் கைதான சொப்னா மற்றும் சந்தீப் நாயரின் ரிமாண்ட் அறிக்கை சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், கடத்தல் தங்கம் தேசவிரோத சக்திகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இவர்கள் நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்க நடந்த சதித்திட்டத்தில் பங்கு பெற்றுள்ளார்கள். இவர்களுக்கு யார் யாருடன் பொருளாதார தொடர்பு உள்ளது என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. சொப்னாவும், சந்தீப் நாயரும் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில், ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. கடத்தல் தங்கம் பார்சல் வந்த ஐக்கிய அரபு அமீரக தூதரகத்துடன் கேரளாவை சேர்ந்த சில முக்கிய அரசியல் பிரமுகர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட பலருக்கும் நெருங்கிய தொடர்பு இருந்துள்ளது. தூதரக அதிகாரிகளை பயன்படுத்தி இவர்கள் முறைகேடான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனரா என்பது குறித்து என்ஐஏ விசாரணை மேற்கொண்டுள்ளது. வெளியுறவுத்துறை சட்டப்படி தூதரக அதிகாரிகளுடன் மாநில அதிகாரிகளோ, ஆட்சியாளர்களோ நேரடி தொடர்பு வைக்கக்கூடாது. ஆனால் கேரள உயர்கல்வித்துறை அமைச்சர் கே.டி.ஜலீல் துணை தூதரிடம் தொடர்புகொண்டு இலவச உணவுப்பொருட்களை வாங்கி வினியோகித்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

மேலும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர் உட்பட பல அதிகாரிகளும் தூதரக உயர் அதிகாரிகளுடன் நேரடி தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் துணை தூதரின் பாதுகாவலராக நியமிக்கப்பட்ட ஜெயகோஷிற்கு 3 முறை பணி நீட்டிப்பை டிஜிபி வழங்கியுள்ளார். இதுதொடர்பாக அவர் மத்திய உள்துறைக்கு தகவல் தெரிவிக்கவில்லை. அமீரகத்துடன் நெருங்கிய தொடர்பில் இருந்த அதிகாரிகள் குறித்து என்ஐஏ விசாரணை நடத்திவருகிறது. துணை தூதரின் பாதுகாவலராக நியமிக்கப்பட்ட ஜெயகோஷிற்கு 3 முறை பணி நீட்டிப்பை டிஜிபி வழங்கியுள்ளார்.

* போலீஸ் அதிகாரி சிபாரிசு

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான சந்தீப் நாயர் கடந்த மாதம் 10ம் தேதி குடிபோதையில் கார் ஓட்டும்போது போலீசில் பிடிபட்டார். திருவனந்தபுரம் மண்ணந்தலை காவல் நிலையம் கொண்டு செல்லப்பட்ட அவர் அங்கும் ரகளை செய்துள்ளார். அப்போது கேரள போலீஸ் அதிகாரிகள் சங்க மாவட்ட தலைவரான சந்திரசேகரன் வந்து சந்தீப் நாயரை ஜாமீனில் விட வலியுறுத்தினார். ஜாமீனுக்கு 2 பேர் இருந்தால் மட்டுமே விட முடியும் என இன்ஸ்பெக்டர் தெரிவித்துள்ளார். ஆனால் தன்னுடைய உறவினர் என்பதால், தனது சொந்த பொறுப்பில் ஜாமீனில் விடுமாறு அவர் கூறியுள்ளார். இருப்பினும் இன்ஸ்பெக்டர் மறுத்துள்ளார்.

இதையடுத்து 2 பேரை அழைத்து வந்து சந்தீப் நாயரை ஜாமீனில் அழைத்து சென்றார். சந்தீப் நாயர் பிடிபட்டபோது காரில் இருந்த ஒரு பையை போலீசார் கைப்பற்றினர். அதில் ரூ.10 லட்சம் இருந்துள்ளது. ஆனால் பை கைப்பற்றப்பட்டது குறித்து முதல் தகவல் அறிக்கையில் எதுவும் குறிப்பிடாமல் சந்தீப் நாயரிடம் திருப்பி கொடுத்து விட்டனர். இந்த சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்த என்ஐஏ தீர்மானித்துள்ளது. மேலும் இதுதொடர்பாக திருவனந்தபுரம் சரக டிஐஜி சஞ்சய்குமாரும் விசாரணை நடத்தி வருகிறார்.

* ஜெயகோஷ் சஸ்பெண்ட்

அமீரக துணை தூதரின் மெய்காப்பாளரான ஜெயகோஷை சஸ்பெண்ட் செய்து திருவனந்தபுரம் கமிஷனர் பல்ராம்குமார் உபாத்யாயா உத்தரவிட்டுள்ளார். பணியில் கவனக்குறைவாக இருந்ததாலும், வேலைக்கு ஒழுங்காக ஆஜராகாததாலும் நடவடிக்கை எடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விசாரணைக்காக கட்டுப்பாட்டறை உதவி கமிஷனர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜெயகோஷின் வட்டியூர் காவு மற்றும் ஆக்குளம் பகுதிகளில் உள்ள 2 வீடுகளிலும் சுங்க இலாகாவினர் அதிரடி சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. என்ன கிடைத்தது என்பது குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை. ஜெயகோஷிடம் சுங்க இலாகாவினர் மீண்டும் விசாரணை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories: