சென்னை: வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை அழைத்து வர 58 விமானங்கள் இயக்கப்பட உள்ளதாக மத்திய அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்கள், சொந்த ஊர்களுக்கு திரும்ப ஏதுவாக தமிழகத்தில் உள்ள விமான நிலையங்களில், விமானங்கள் தரையிறங்க அனுமதி வழங்க உத்தரவிடக் கோரி திமுக சார்பில் அதன் செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதே கோரிக்கையுடன் ராஜா முகமது என்பவரும் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்குகள் கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, வெளிநாடு களில் சிக்கியுள்ள 25,939 தமிழர்களை தாயகம் அழைத்து வர எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விளக்கமளிக்க மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.