மீண்டும் மீண்டும் தலைப்பு செய்தியாகும் ராஜஸ்தான் அரசியல்; முதல்வர் அசோக் கெலாட் சகோதர் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை..!!!

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் -காங்கிரஸ் அதிருப்தி தலைவரான சச்சின் பைலட் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. சச்சின் பைலட், பாரதிய ஜனதாவுடன் சேர்ந்து ஆட்சியை கவிழ்க்க முயல்கிறார் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. முதலமைச்சர் அசோக் கெலாட் உடன் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து சச்சினின் துணை முதலமைச்சர் பதவி மற்றும் கட்சியின் மாநில தலைவர் பதவி பறிக்கப்பட்டது. இதற்கிடையே, சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கு எதிராக சபாநாயகர் தகுதி நீக்க நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இதை எதிர்த்து சச்சின் தரப்பு தொடர்ந்த வழக்கில் சபாநாயகர் 24ம் தேதி வரை எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

தற்போது தனது ஆதரவாளர்கள் 18 பேருடன், ஹரியானாவில் உள்ள ஒரு சொகுசு ஓட்டலில் சச்சின் பைலட் தங்கியுள்ளார். இந்த நிலையில் பாரதிய ஜனதா அணிக்கு செல்ல தனக்கு சச்சின் பைலட் 35 கோடி ரூபாய் தர முன்வந்தார் என்று அசோக் கெலாட் இடம் ஆதரவு எம்.எல்.ஏ ஆன கிரிராஜ் சிங் மலிங்கா தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை கடுமையாக மறுத்துள்ள சச்சின் பைலட், புகார் கூறிய எம்.எல்.ஏ. கிரிராஜுக்கு எதிராக வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இப்படியாக, ராஜஸ்தான் அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் சகோதரர் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள அனுபம் கிருஷி என்ற நிறுவனத்தில் அமலாக்க இயக்குநரகம் சோதனை நடத்தி வருகிறது. இது ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லோட்டின் சகோதரர் அக்ரஸன் கெஹ்லோட்டுக்கு சொந்தமானது. சுங்கத் துறை அனுபம் கிருஷி நிறுவனத்திற்கு ரூ .7 கோடி அபராதமும் விதித்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் ராஜஸ்தான் காங்கிரஸ்  துணை தலைவர் தர்மேந்திர ரத்தோர், ராஜீவ் அரோரா ஆகியோரின் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்திய நிலையில், முதல்வர் சகோதர்கள் வீடுகளில் சோதனை நடைபெறுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க பாஜக அரசு செய்யும் வேலைதான் வருமான வரித்துறை சோதனை என குற்றம்சாட்டப்படுகிறது.

Related Stories: