கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் ஆயுதப்படை போலீசாருக்கு உளவியல் பயிற்சி

சென்னை: கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் ஆயுதப்படை போலீசாருக்கு மன அழுத்தத்தை போக்கும் வகையில் உளவியல் நிபுணர்கள் மூலம் ஆலோசனை மற்றும் பயிற்சி வழங்கப்பட்டது. சென்னை மாநகர முழுவதும் கொரோனா தடுப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் கொரோனா தடுப்பு மற்றும் தடை செய்யப்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த 1,500க்கும் மேற்பட்ட போலீசாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்றும் புதிதாக 19 போலீசாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் கொரோனா தடுப்பு பணி மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் போலீசார் மற்றும் ஆயுதப்படை போலீசார் கடுமையாக மன அழுத்தத்திற்கு ஆளாகி உள்ளனர்.

எனவே போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவுப்படி கொரோனா தடுப்பு பணி மற்றும் தடை செய்யப்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் போலீசார் மற்றும் ஆயுதப்படை போலீசார் மன அழுத்தத்திற்கு உளவியல் நிபுணர்கள் மூலம் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆயுதப்படை காவலர்களுக்கு பகுதி வாரியாக ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், நேற்று எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் மன அழுத்தத்திற்கான ஆலோசனை மற்றும் யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. நேற்று நடந்த பயிற்சியில் தடை செய்யப்பட்ட பகுதியில் பணியில் ஈடுபட்டு வரும் 200 ஆயுதப்படை காவலர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு கிங்க் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தின் உளவியல் நிபுணர் மகாலட்சுமி மூலம் ஆலோசனைகள் வழங்கப்பட்டது. மேலும், சித்த மருத்துவர் மற்றும் வாழும் கலை அமைப்பு மூலம் யோகா பயிற்சியும் வழங்கப்பட்டது.

Related Stories: