நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் ஆகஸ்ட் 1, 2 தேதிகளில் நடைபெறும் வல்வில் ஓரி விழா ரத்து: ஆட்சியர் அறிவிப்பு

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் நடைபெறும் வல்வில் ஓரி விழா கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ரத்து செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர் மெகராஜ் உத்தரவிட்டுள்ளார். கொரோனோ விதிமுறைகள் நடைமுறையில் உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் கொல்லிமலை வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி வருவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் ஆண்டுதோறும் ஆடி மாதம் 17, 18 ஆகிய தினங்களில் வல்வில் ஓரி விழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த விழாவை ஒட்டி பல்வேறு மாநில விளையட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் வில்வித்தை போட்டிகளும் நடத்தப்படும். தற்போது நோய்த்தொற்று பரவாமல் தடுக்க ஜூலை 31ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு ஆகஸ்ட் 1 மற்றும் 2 ஆகிய தினங்களில் வல்வில் ஓரி விழா நடத்த இயலாத சூழல் உள்ளது.

மேலும் மலர் கண்காட்சி, கலைநிகழ்ச்சிகள், வில்வித்தை போட்டி உள்ளிட்ட எந்த நிகழ்ச்சிகளும் நடத்தப்படாது. எனவே வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்கள், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கொல்லிமலைக்கு வர வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மாவட்ட நிர்வாகத்தின் அறிவிப்பினை மீறி வருவோர் மீது 144 தடை உத்தரவு சட்டம், கொள்ளை நோய் தடுப்பு சட்டம் மற்றும் பேரிடர் மேலாண்மை சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன் அபராதமும் விதிக்கப்படும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மெகராஜ் தெரிவித்துள்ளார்.

Related Stories: