கொரோனா அச்சத்தால் களை இழந்த ஆடி அமாவாசை தாமிரபரணி நதிக்கரை வெறிச்சோடியது: தனித்தனியாக தர்ப்பணம் செய்த பொதுமக்கள்

நெல்லை: கொ ரோனா ஊரடங்கால் ஆடி அமாவாசையை முன்னிட்டு தாமிரபரணி ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க தடை விதிக்கப்பட்டதால், தாமிரபரணி நதிக்கரைகள் வெறிச்சோடியது. சிலர் தனியாக வந்து தாமிரபரணி நதியில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். தங்களது இல்லத்தில் புரோகிதர்களை அழைத்து மாடியில் வைத்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். ஆடி அமாவாசை தினம் முன்னோர்களை வணங்க சிறப்பான நாளாகும். தட்சிணாயன புண்ணிய காலத்தில் வரும் ஆடி அமாவாசை பித்ரு தர்ப்பணத்திற்கு மிகவும் உகந்ததாக கருதப்படுகிறது.

ஆடி அமாவாசை நாளன்று ஆறு, குளம், முக்கடல் சங்கமிக்கும் ராமேஸ்வரம், கன்னியாகுமரி உள்ளிட்ட நீர்நிலைகளில் தங்களது முன்னோர்களை நினைத்து புரோகிதர்கள் மூலம் தேங்காய் பழம், வெற்றிலை, பாக்கு வைத்து எள், தண்ணீர் கொண்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது இந்துக்களின் வழக்கமாகும்.  இதில் ஆடி அமாவாசை, தை அமாவாசை, மஹாளய அமாவாசை நாட்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது குடும்ப நன்மை பயக்கும். ஆண்டு தோறும் இந்துக்கள் இதனை கடைபிடித்து வருகின்றனர். இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.

ஆடி அமாவாசை தினத்தில் ஆயிரகணக்கானவர்கள் நீர்நிலைகளில் கூடுவதால் கொரோனா பரவக் கூடும் என்பதால் நெல்லை மாவட்டம் முழுவதும் தாமிரபரணி ஆறு உள்ளிட்ட நீர்நிலைகளில் பொதுமக்கள் தர்ப்பணம் செய்ய நெல்லை மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. இதையொட்டி மாவட்டம் முழுவதும் தாமிரபரணி முக்கிய தீர்த்த கட்டங்களான பாபநாசம், மணிமுத்தாறு, முக்கூடல், அம்பாசமுத்திரம், குறுக்குத்துறை, கொக்கிரகுளம், வண்ணார்பேட்டை பேராத்து செல்வி அம்மன் கோயில் படித்துறை, மணிமூர்த்தீஸ்வரம் விநாயகர் கோயில் படித்துறை உள்ளிட்ட தாமிரபரணி ஆற்றின் படித்துறைகளில் பொதுமக்கள் தர்ப்பணம் கொடுக்க தடை விதிக்கப்பட்டது.

இதே போல் தூத்துக்குடி மாவட்டத்தில் முறப்பநாடு தாமிரபரணி தீர்த்தக் கட்டம் உள்ளிட்ட ஆற்றின் கரையோர பகுதிகளிலும் தர்ப்பணத்திற்கு தடை விதிக்கப்பட்டது. இதற்காக தாமிரபரணி ஆற்றுக்கு செல்லும் பாதைகளை போலீசார் தடுப்புகள் வைத்து அடைத்தனர். மேலும் ஆற்றங்கரைகளில் பொதுமக்கள் கூடாதவாறு முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்து தாமிரபரணி ஆற்றுக்கு வந்த பொதுமக்கள் புரோகிதர்கள் இன்றி ஆற்றில் குளித்து பூஜை பொருட்களை வைத்து தாங்களாகவே எள், தண்ணீரை இறைத்து தங்கள் முன்னோர்களுக்கு தர்பணம் கொடுத்தனர்.

தூத்துக்குடி கடற்கரை யில் எஸ்பி ஆய்வு:  கொரோ னா ஊரடங்கால் தூத்துக்குடி புதிய துறைமுகம் கடற்கரை பகுதியிலும் முன்னோருக்கு தர்ப்பணம் செய்ய யாரும் அனுமதிக்கப்படவில்லை.  அப்பகுதியில் டவுன் டிஎஸ்பி கணேஷ் தலைமையில் 3 அடுக்கு பாதுகாப்பு  போடப்பட்டு, அங்கு செல்பவர்கள் திருப்பி அனுப்பபட்டனர். இதனால் பலர்  பீச்ரோட்டில் உள்ள கடல் கழிமுகத்துவார பகுதிகளில் தேங்கியிருந்த நீரில்  நீராடி, தர்ப்பணம் மற்றும் சூரிய நமஸ்காரம் செய்து முன்னார்களை வழிபட்டனர்.

தூத்துக்குடி தெர்மல் நகர் புதிய துறைமுகம் கடற்கரை பகுதியை எஸ்பி., ஜெயக்குமார் நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது தூத்துக்குடி டவுன் டிஎஸ்பி., கணேஷ், தெர்மல் நகர்  இன்ஸ்பெக்டர் கோகிலா மற்றும் போலீசார் உடனிருந்தனர். ஆடி அமாவாசை அன்று புனித நதியில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது இந்துக்களின் நம்பிக்கையாக உள்ள நிலையில் இந்த ஆண்டு ஆடி அமாவாசைக்கு புனித நதிகளில் நீராடத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களும் பக்தர்களும் பெருத்த ஏமாற்றம் அடைந்தனர். மாலை வரையிலும் யாரும் கடற்கரைகளில் தர்ப்பணம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.

களையிழந்த திருச்செந்தூர் கடற்கரை

ஆண்டுதோறும் தை, ஆடி அமாவாசை நாட்களில் மூதாதையர்களுக்கு திருச்செந்தூர் கடற்கரையில் ஏராளமானோர் தர்ப்பணம் செய்வது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால் கடற்கரையில் தர்ப்பணம் செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் திருச்செந்தூர் கடற்கரையில் யாரும் தர்ப்பணம் செய்ய வரவில்லை. திருச்செந்தூர் கடற்கரை வெறிச்சோடி காணப்பட்டது. கடற்கரை பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

மொட்டை மாடியில் வழிபாடு

கொரோனா ஊரடங்கால் தாமிரபரணி ஆற்றில் ஆடி அமாவாசை தர்ப்பணம் கொடுக்க தடை விதிக்கப்பட்டதால், பலர் தங்கள் வீடுகளின் மொட்டை மாடியில் வைத்து புரோகிதர் மூலம் வெற்றிலை, பாக்கு, பழம், பச்சரிசி வைத்து தங்களது முன்னோர்களுக்கு எள், தண்ணீர் இறைத்து தர்ப்பணம் கொடுத்து முன்னோர்களை வழிபட்டனர். பின்னர் வாழைப்பழங்களை பசுக்களுக்கு வழங்கினர்.

பக்தர்கள் பங்கேற்பு இல்லாமல் காரையாறு சொரிமுத்தய்யனார் கோயிலில் ஆடி அமாவாசை பூஜை

பாபநாசம் மலைப்பகுதியில் உள்ள காரையாறு சொரிமுத்தய்யனார் கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா ஆண்டுதோறும்  சிறப்பாக கொண்டாடப்படும். இவ்விழாவில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள். இதற்காக ஒரு வாரத்திற்கு முன்னதாகவே நெல்லை, தென்காசி மாவட்டங்களிலிருந்து பக்தர்கள், கோயில் பகுதிகளில் குடில் அமைத்து தங்கி சுவாமி தரிசனம் செய்வார்கள். இதன் பொருட்டு பாபநாசம் அரசு போக்குவரத்து கழகத்திலிருந்து ஒரு வாரத்திற்கு முன்னதாகவே சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.

ஆனால் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் எதிரொலியாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் சொரிமுத்தய்யனார் கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால் பக்தர்கள் பங்கேற்பில்லாமல் சொரிமுத்தய்யனார் கோயில் மற்றும் அதன் வளாகத்தில் உள்ள மகாலிங்க சுவாமி, சங்கிலி பூதத்தார், பேச்சியம்மன், தளவாய் மாடசாமி, காத்தவராயன் உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. காரையாறு கோயிலுக்கு செல்லும் பிரதான சாலையான பாபநாசம் வனச்சோதனைசாவடி அடைக்கப்பட்டு, பக்தர்கள் யாரும் கோயிலுக்கு செல்லாத வண்ணம், வனத்துறையினரால் கண்காணிக்கப்பட்டது.

Related Stories: