ஜனநாயக வழியில் மீண்டும் திமுக ஆட்சி கலைஞருக்கு காணிக்கையாக்க அயராது உழைக்க வேண்டும்: தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை:  ஜனநாயக வழியில் மீண்டும் திமுக ஆட்சி அமைத்து அதை கலைஞருக்கு காணிக்கையாக்கிட கட்சி தொண்டர்கள் அனைவரும் அயராது உழைத்திட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று தனது தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: சீனாவைவிடச் சென்னையில் நோய்த்தொற்று அதிகம் எனப் புள்ளி விவரங்கள் வெளிப்படுத்தினாலும், தன்னைச் சுற்றியுள்ள அமைச்சர்களுக்கே கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்டாலும் முதல்வர் பழனிசாமி, ‘தமிழ்நாட்டில் சமூகப் பரவல் இல்லை. கொரோனா விரைவில் ஒழிந்துவிடும்’ என்பதை மட்டுமே ‘’கீறல் விழுந்த கிராம்போன் ரெக்கார்டு’’ போல, திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருப்பார்.

ஞாயிற்றுக்கிழமையான ஜூலை 19 ஒரு நாளில் மட்டும் கிருஷ்ணகிரி செங்குட்டுவன், ராணிப்பேட்டை காந்தி, வேலூர் கார்த்திகேயன் எனக் கழகத்தின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மூவர் கொரோனா தொற்றுக்குள்ளானதை அறிந்ததும் வேதனையும் மனச்சோர்வும் அதிகமானது. என்ன செய்வதென்று அறியாமல், எனது அறையிலிருந்த தலைவர் கலைஞரின் படத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன். மூவரையும் தொடர்புகொண்டு நலன் விசாரித்தேன். மருத்துவர்களிடம் பேசி, சிகிச்சைகள் குறித்துக் கேட்டறிந்தேன். எந்த மதத்தின் மீதும் திமுகவுக்கு வெறுப்பு கிடையாது. பல மதத்தினரும் திமுகவில் அங்கம் வகிக்கிறார்கள், தம் மதம் - சாதி மறந்து யாருக்கும் சாதிப் பகை வளர்த்திடும் சகுனித்தனம் கூடாது. எவரது நம்பிக்கையிலும் பழக்கவழக்கங்களிலும் குறுக்கிடுவதில்லை. அவரவர் உரிமைகள் நிலைநாட்டப்படும் என அனைத்துத் தரப்பு மக்களுக்காகவும் குரல் உயர்த்தி, ஆதிக்க சக்திகளுக்கு எதிரான சமரசமற்ற போராட்டம் தான் இந்தப் பேரியக்கத்தின் லட்சியப் பாதை.

69 சதவீத இடஒதுக்கீடு என்பது சமூகநீதிக் கோட்பாட்டினை நிலைப்பெறச் செய்வதற்கான பெருமுயற்சி. அதில் 3.5 சதவீதம் என்பது சிறுபான்மை முஸ்லிம் சமுதாயத்தினருக்கு உரியது என்றால், மீதமுள்ள 65.5 சதவீதம் மொத்தமும் பெரும்பான்மை மதமான இந்து மதத்தைச் சேர்ந்த சகோதர - சகோதரிகளின் வாழ்வு மலரவும் உயரவும் காரணமாக அமைந்தது. திருவாரூர் கோயில் தேரோட்டம், மயிலாப்பூர் கோயில் தெப்பக்குளம் தூர்வாருதல் எனத் தொடங்கி தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு கோவிலின் திருப்பணியிலும் கவனம் செலுத்தி, கவனிப்பாரற்று இருந்த கோயில்களிலும் ஒரு காலப் பூசையேனும் நடந்திட வழிவகுத்தது தலைவர் கலைஞர் தலைமையிலான திமுக ஆட்சி. கிராமப்பூசாரிகள் நலனுக்காக வாரியம் அமைக்கப்பட்டது. தமிழ் வழிபாட்டு முறைக்கு முன்னுரிமை தரப்பட்டது. எல்லாவற்றுக்கும் மேலாக, ஆண்டவன் சன்னதியில் அனைவரும் சமம் என்கிற அடிப்படையில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டம் கொண்டு வரப்பட்டது. இப்படி எடுத்துச் சொல்ல எத்தனையோ இருக்கின்ற நிலையில், நம்மை நோக்கி ‘இந்து விரோதிகள்’ என்று விமர்சனத்தை வைத்து, வளர்ச்சியைத் தடுத்துவிடலாம் என அரதப்பழசான சிந்தனையை புதிய தொழில்நுட்பங்களின் வழியே புத்தம் புதிய காப்பியாக ரிலீஸ் செய்து பார்க்கிறார்கள்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியான இந்துக்கள் - கிறிஸ்தவர்கள் என எந்த மதத்தினராக இருந்தாலும் அவர்களுக்கு நீதி கிடைத்திடப் போராடுகிறது நமது இயக்கம். அதில் உயிர்பறிக்கப்பட்ட இந்துக்களைக் கொச்சைப்படுத்தியவர்கள் தான் நம்மை இந்து விரோதி என்று திசை திருப்பிடப் பார்க்கிறார்கள். இந்தச் சமூக வலைதள யுகத்தில் ஒவ்வொருவருக்கும் அவர்களின் கருத்துகள் எளிதில் சென்று சேர்வதால் அதனை கவனிக்கக்கூடிய திமுகவினர் சிலர் உடனடியாக உணர்ச்சிவசப்பட்டு எதிர்வினையாற்றும் போக்குத் தெரிகிறது. அதனைக் கைவிடுங்கள். நகைச்சுவைத் துணுக்குகளாக நினைத்துப் புறந்தள்ளுங்கள். மக்களின் உரிமைகளுக்காகவும் அவர்களின் நலனுக்காவும் பாடுபடவேண்டிய பொறுப்பும் கடமையும் நமக்கு உள்ளது. சதிகாரர்களின் சமூக வலைதள வலைகளில் சிக்கி உங்கள் நேரத்தை வீணடித்திட வேண்டியதில்லை. அதனை உரிய முறையில் தலைமைக் கழகம் கவனித்துக் கொள்ளும்.

நீங்கள் செய்ய வேண்டிய பணி, தமிழ்மொழி - தமிழ் இனம் - தமிழ் நிலம் - தமிழர் நலம் இவற்றிற்காக நம் உயிர் நிகர் தலைவர் கலைஞரின் 80 ஆண்டுகால பொதுவாழ்வுப் போராட்டங்களாலும் ஆட்சித்திறனாலும் ஏற்பட்ட மறுமலர்ச்சியையும் அதனால் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் அடைந்த பலன்களையும் அதன்விளைவாக ஏற்பட்ட மாற்றங்களையும் அனைத்துத் தரப்பு மக்களிடமும் கொண்டு சென்று அவர்களின் மனதில் பதிய வைப்பதுதான். அதனைச் சளைக்காமல் மேற்கொள்ளுங்கள். அறப்போர் களத்தைக் கட்டியமைப்போம்; அக்கப்போர்க் களங்களைப் புறக்கணிப்போம்.

ஜனநாயக வழியில் மீண்டும் திமுக ஆட்சியை அமைத்து, இந்தப் பேரியக்கத்தை உருவாக்கிய அண்ணாவின் அருகில் ஓய்வு கொண்டிருக்கும் கலைஞருக்கு காணிக்கையாக்கிட வேண்டும் என்பதுதான். திட்டமிட்டு, திசைதிருப்பும் நாடகங்களில் மயங்காது, அவற்றைப் புறந்தள்ளி, ஜனநாயகக் களத்தில் தொடர்ந்து முன்னேறிச் செல்லும் வகையில் அயராது உழைத்திடுவோம். திமுகவுக்கு மக்கள் அளிக்கும் மகத்தான வெற்றியை, தலைவர் கலைஞருக்குக் காணிக்கையாக்கிடுவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார். திமுக ஆட்சி காலத்தில் கிராமப்பூசாரிகள் நலனுக்காக வாரியம் அமைக்கப்பட்டது. தமிழ் வழிபாட்டு முறைக்கு முன்னுரிமை தரப்பட்டது.

Related Stories: