புதுவையில் ரூ.9,000 கோடிக்கு பட்ஜெட் தாக்கல் கலைஞர் கருணாநிதி காலை சிற்றுண்டி திட்டம்: முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபையில் ரூ.9 ஆயிரம் கோடிக்கான பட்ஜெட்டை முதல்வர் நாராயணசாமி நேற்று தாக்கல் செய்தார். அதில் கலைஞர் கருணாநிதி காலை சிற்றுண்டி திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்பது உள்பட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். புதுச்சேரி சட்டசபையில் நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் நாராயணசாமி நேற்று மதியம் பட்ஜெட் தாக்கல் செய்து பேசியதாவது: புதுச்சேரியை 15வது நிதிக்கமிஷனில் சேர்க்க வேண்டும் என பலமுறை கோரிக்கை வைத்தும், மத்திய அரசு ஏற்கவில்லை. தற்போது,  மத்திய அரசு நிதி உதவி ரூ.1700  கோடியாக உள்ளது. நிதிக்கமிஷனில் சேர்ப்பதன் மூலம் ரூ.2800 கோடியாக  கிடைக்கும்.

இதனை மத்திய அரசு இன்னமும் ஏற்கவில்லை. 2020-21 பட்ஜெட் ரூ.9 ஆயிரம் கோடியாக இருக்கும். இதில் மாநில வருவாய் 5 ஆயிரத்து 267 கோடியாகவும், மத்திய அரசின் நிதி உதவி 2 ஆயிரத்து 23 கோடியாகவும், வெளிச்சந்தை கடன் 1710 கோடி மூலம் திரட்டப்படும். வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு குடிநீர் கட்டணம் ரத்து செய்யப்படும். 100 யூனிட்டுக்கு கீழ் பயன்படுத்தும் மின்சார கட்டணமும் ரத்து செய்யப்படும். புதுச்சேரியில் பால் உற்பத்தியை பெருக்க மகாத்மா காந்தி பெயரில் பால் உற்பத்தியாளர் ஊக்குவிப்பு திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். அதன்படி லிட்டருக்கு ரூ.2 கூடுதலாக வழங்கப்படும்.

அரசு பள்ளி மாணவ- மாணவியர்களுக்கு காலையில் பால் வழங்கப்படுகிறது. இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டு வரும் நவம்பர் 14ம் தேதி முதல் கலைஞர் கருணாநிதி காலை சிற்றுண்டி திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். காலையில் இட்லி, பொங்கல், கிச்சடி என சிற்றுண்டி வழங்கப்படும். அமிழ்தம் என்ற பெயரில் நடமாடும் மலிவு விலை உணவகம் துவங்கப்படும். இவை உள்பட பல்வேறு அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். வெளிநடப்பு: சட்டசபையில் இருந்த என்ஆர் காங்., அதிமுக, பாஜக எம்எல்ஏக்கள் கவர்னர் உரை இடம் பெறாதது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும். கவர்னர் உரை இல்லாமல் பட்ஜெட் போடுவது விதிகளை மீறிய செயல். இது தவறானது என கூறி கூச்சல் போட்டனர். பதிலுக்கு ஆளுங்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, வெளிநடப்பு செய்வதாக கூறி எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் ஒட்டுமொத்தமாக வெளிநடப்பு செய்தனர்.

* திமுக தொண்டர்கள் மனதில் இடம்பிடித்த நாராயணசாமி: மு.க.ஸ்டாலின் வாழ்த்து

திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது முகநூல் பதிவில் கூறியிருப்பதாவது: ‘புதுவையின் புரட்சி முதல்வர்’’ நாராயணசாமி, முத்தமிழறிஞர் கலைஞர் பெயரால் பள்ளி மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளார். கலைத் தொண்டு மூலமாக கலைஞர் கழகம் வளர்த்த மாநிலத்தில் அவர் பெயரால் ஒரு திட்டம் தொடங்கி இருப்பது பெருமகிழ்ச்சிக்குரியது. தனது செயலின் மூலம் கோடானுகோடி திமுக தொண்டர்கள் மனதில் இடம் பெற்றுவிட்டார் முதல்வர் நாராயணசாமி. வாழ்க அவர் புகழ். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: