கொரோனா ஊரடங்கால் விஷேச நிகழ்ச்சி குறைந்தது தூத்துக்குடியில் வாழை இலை விலை கடும் வீழ்ச்சி: விவசாயிகள் கவலை

ஸ்பிக்நகர்: கொரோனா ஊரடங்கை யொட்டி விஷேச நிகழ்ச்சி குறைந்தததால் தூத்துக்குடி மார்க்கெட்டில் வரத்து இருந்தும் வாழை இலை விற்பனையில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. ரூ.3 ஆயிரம் வரை விலை போன இலைகட்டுகள் தற்போது ரூ.600க்கு விற்பனையாவதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.  தூத்துக்குடி மாவட்டத்தில் கோரம்பள்ளம், அத்திமரப்பட்டி, காலாங்கரை, குலையன்கரிசல், சிவத்தையாபுரம், பழையகாயல், முக்காணி, ஏரல், ஆத்தூர், ஆறுமுகநேரி உள்ளிட்ட பல இடங்களில் வாழை சாகுபடி அதிகளவில் நடந்து வருகிறது. இப்பகுதியில் நாடு, சக்கை, ரசகதலி, ஏத்தன் உள்ளிட்ட வாழை ரகங்கள் அதிகம் சாகுபடி செய்யப்படுகின்றன. பொதுவாக வாழைக்காய்களுக்கு விலை கிடைக்கவில்லை என்றால், விவசாயிகள் வாழை இலைகளை அறுத்து விற்பனை செய்வர்.

நடவு செய்த 8 மாதத்தில் வாழை குலை தள்ளும். 10வது மாதத்தில் பக்கவாட்டு கன்றுகளில் உள்ள இலைகளை அறுத்து விற்பனை செய்யலாம். ஒரு வாழை இலை கட்டுக்கு 40 மடி இருக்கும். ஒரு மடிக்கு 5 இலை வீதம், கட்டுக்கு 200 இலைகள் இருக்கும். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் இலைகளை அறுத்து மார்க்கெட் மற்றும் கமிஷன் கடைகளில் விற்பனை செய்வர். அங்கிருந்து தூத்துக்குடி மாவட்டத்தின் பிற பகுதிகளுக்கும் சென்னை, பெங்களூரூ, திருநெல்வேலி, திருச்சி ஆகிய நகரங்களுக்கும், புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பப்படுகிறது.

கடந்த ஆண்டு வாழை இலை கட்டு ரூ.3000 வரை விலை போனது. ஆனால் தற்போது கொரோனா நோய் பரவலால் விஷேச நிகழ்ச்சிகள் மிகவும் குறைந்துள்ளன. கோயில் கொடை விழாக்கள் ஏதும் நடைபெறாததால் பெரிய வாழை இலை கட்டு ரூ.600க்கு விற்பனையாகிறது. ரூ.1000 வரை விலை போன மீடியம் சைஸ் கட்டு தற்போது ரூ.250 முதல் 300 வரை விற்பனை ஆகிறது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

இதுகுறித்து அத்திமரப்பட்டி விவசாயி கோயில்பிச்சை கூறுகையில், ‘கடந்த இரண்டு ஆண்டுகளாக கடுமையான வறட்சி காரணமாக விவசாயத்தில் எந்தவித லாபமும் எடுக்க முடியவில்லை.

ஆனால் இந்த ஆண்டு நன்றாக தண்ணீர் இருந்ததால் வாழைகள் செழித்து வளர்ந்தன. கொரோனா ஊரடங்கு காரணமாக வியாபாரிகள் வராததால் ரூ.500க்கு விற்ற வாழைத் தார்கள் ரூ.100க்கு தான் விலை போனது. இதனால் வாழை இலைகளை விற்றாவது செலவு செய்ததை எடுக்கலாம் என்று நினைத்தால் வாழை இலை கட்டுகளின் விலை அறுப்பு கூலி, வண்டி வாடகைக்கு மட்டுமே போதுமானதாக உள்ளது’ என்றார்.

Related Stories: