அமெரிக்காவில் தொடரும் கொரோனாவின் தாண்டவம்!: ஒரே நாளில் 63,600 பேருக்கு தொற்று உறுதி!!!

வாஷிங்டன்: அமெரிக்காவில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 62 ஆயிரம் பேர் கொரோனா தொற்றுக்கு இலக்காகி வருவது அதிபர் டொனால்ட் டிரம்ப் அரசை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அமெரிக்காவில் உள்ள 30க்கும் மேற்பட்ட மாநிலங்களில் வைரஸ் தொற்று மளமளவென அதிகரித்து வருகிறது. இதுவரை 38 லட்சத்து 97 ஆயிரம் பேரை கோவிட் - 19 வைரஸ் பாதித்திருக்கிறது. டெக்ஸ்சாஸ், போரிடா, கலிபோர்னியா ஆகிய மாநிலங்களில் மின்னல் வேகத்தில் கொரோனா பரவி வருகிறது. இதுவரை 1 லட்சத்து 43 ஆயிரத்து 300 பேரின் உயிர்களை கொரோனா வைரஸ் பறித்து சென்றிருக்கிறது.

தென் அமெரிக்க நாடான சிலியில் வைரஸின் தாக்கம் சற்று குறைய தொடங்கியதை அடுத்து சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. இதுகுறித்து அங்குள்ளவர்கள் தெரிவித்ததாவது, ஐந்து மாதங்கள் பெரும் துயரத்தினை சந்தித்த பின், தற்போது ஓரளவுக்கு பலன் கிடைத்துள்ளது. மக்களின் ஒத்துழைப்பு மற்றும் தியாகத்தால் இது சாத்தியமானது. ஐந்தாவது மாதமாக பெருந்தொற்று குறைய தொடங்கி இருக்கிறது. இந்த காலகட்டத்தில் தான் தொற்றின் எண்ணிக்கை கீழ் நோக்கி பயணித்துள்ளது என தெரிவிக்கப்பட்டது. பிரேசில் நாட்டிலும் வைரஸ் பரவலும், உயிரிழப்பும் அதிகரித்துவிட்டது. அங்கு 25 ஆயிரம் புதிய தொற்றும், 720 புதிய உயிரிழப்புகளும் பதிவாகியிருக்கிறது. மெக்சிகோ, பெரு, தென்ஆப்ரிக்கா, அர்ஜென்டினா, சவூதி அரேபியா ஆகிய நாடுகளிலும் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது.

சீனாவில் மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால் வடமேற்கு மாகாணமான ஷின்ஜியாங்கில் போர்க்கால அடிப்படையில் அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது. 210க்கும் மேற்பட்ட நாடுகளில், இதுவரை 1 கோடியே 46 லட்சத்து 34 ஆயிரம் பேர் கொரோனா வைரசுக்கு இலக்காகியுள்ளனர். உலகளவில் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட உயிர்களை கோவிட் - 19 கொல்லுயிரி பறித்து சென்றிருக்கிறது.

Related Stories: