தமிழக பொதுப்பணித்துறையில் லைசென்ஸ் புதுப்பிக்காத கான்டிராக்டர்கள் 25 ஆயிரம் பேர் டெண்டரில் பங்கேற்க தடை: கொரோனாவிலும் உயரதிகாரிகள் நெருக்கடி

சென்னை: தமிழக பொதுப்பணித்துறையில் பல்வேறு பணிகளை மேற்கொள்ள மாநிலம் முழுவதும் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்ததாரர்கள் உள்ளனர். இவர்கள், ஆண்டுக்கு ஒருமுறை லைசென்ஸ் புதுப்பித்தால் தான் புதிய டெண்டர்களில் பங்கேற்க முடியும். இதற்கிடையே ஒப்பந்ததாரர்கள் மறு உரிமம் பெறுமாறு நீர்வளப்பிரிவு முதன்மை தலைமை பொறியாளர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் ஜிஎஸ்டி, வருமானவரி மற்றும் பில் உட்பட தேவையான ஆவணங்களை சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் இருந்து பெற்று மறு உரிமம் (லைசென்ஸ் புதுப்பித்தல்) பெற முடியாத சூழ்நிலை உள்ளது. மேலும், அதிக அளவிலான பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்கள் சென்னை தவிர்த்து வெளி மாவட்டங்களில் உள்ளனர். இவர்கள் அனைவரும் தற்போது சென்னைக்கு நேரில் வர முடியாது.

இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கம் கடிதம் எழுதியுள்ளது. ஆனால், இந்த கடிதத்திற்கு பதில் வரவில்லை என்று கூறப்படுகிறது. அதேசமயம் மத்திய பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்களுக்கு ஒரு ஆண்டு காலத்திற்கு புதுப்பித்தலுக்கு கால நீட்டிப்பு வழங்கி உள்ளது. இந்த நிலையில், ஒப்பந்ததாரர்கள் மறு உரிமம் பெறாததால் டெண்டரில் பங்கேற்பதில் தடை விதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், உயர் அதிகாரிகள் மறு உரிமத்துக்கு விண்ணப்பித்தால் மட்டுமே கலந்து கொள்ள முடியும் என்ற சொல்கின்றனர். இதனால், பெரும்பாலான ஒப்பந்ததாரர்கள் டெண்டரில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. தற்போதுள்ள சூழ்நிலையில் பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்களின் நலன் கருதி ஒப்பந்ததாரர்களின் புதுப்பித்தலை எவ்வித ஆவணங்களும் புதிதாக கோராமல் ஒரு ஆண்டுகாலத்திற்கு நீட்டித்து தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: