காசநோய்க்கான பிசிஜி தடுப்பூசியை போட்டால் கொரோனா தாக்குதலில் இருந்து முதியவர்களை காக்க முடியுமா? சிவப்பு மண்டலங்களில் ஆய்வு நடத்த முடிவு

புதுடெல்லி: உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்தியாவில், ‘கோவாக்சின்’ என்ற தடுப்பு மருந்து சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இதை மனிதர்களுக்கு செலுத்தி சோதனை நடத்துவது தொடங்கி இருக்கிறது. இந்தியாவில் கடந்த ஜனவரியில் கொரோனா பரவியபோது, இந்திய மக்களுக்கு பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்த முடியவில்லை என்பது கண்டறியப்பட்டது. இந்தியர்களின் உடலில் நுழைந்ததும், இந்த வைரஸ் பலவீனமாகி விடுவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதற்கு, ‘50 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே குழந்தை பருவத்தில் காசநோய்க்காக வழங்கப்பட்ட பிசிஜி தடுப்பு மருந்துதான் காரணம்,’ என்றனர்.

பெரும்பாலானவர்களுக்கு கொரோனா தாக்கிய போதும், அறிகுறியின்றி அவர்கள் நலமாக இருப்பதற்கு இந்த தடுப்பு மருந்துதான் காரணம் என நம்பப்படுகிறது. இதனால், இந்த தடுப்பு மருந்தால் உண்மையிலேயே கொரோனாவை கட்டுப்படுத்த முடிகிறதா என்பதை அறிய, இந்திய மருந்து ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) முடிவு செய்துள்ளது. இதற்காக, நோய் பரவல் அதிகமாக உள்ள சிவப்பு மண்டலங்களில் வசிக்கும் ஆரோக்கியமான 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு பிசிஜி தடுப்பு மருந்தை கொடுத்து, பன்முக ஆய்வு நடத்த உள்ளது.

இதன் மூலம்,

* சிவப்பு மண்டலங்களில் வசிக்கும் 60 வயதுக்கு மேற்பட்ட ஆரோக்கியமான 1,500 முதியவர்களுக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்பட்ட பிறகு, கொரோனா தாக்குதலில் இருந்து தப்பிக்கிறார்களா?

* தடுப்பூசி செலுத்திய பிறகும் கொரோனா தாக்கினால், அதில் இருந்து மீள்வதற்கான எதிர்ப்பு சக்தியை அவர்கள் பெறுகின்றார்களா?

* தடுப்பூசி செலுத்தப்பட்ட பிறகும் நோயின் தன்மை அதிகமாகி உயிரிழப்பு வரை செல்கிறதா?

- ஆகியவை கண்டுபிடிக்கப்பட உள்ளது. முதல் கட்டமாக, தமிழகம், மகாராஷ்டிரா, குஜராத், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் டெல்லியில் உள்ள 6 ஆய்வு மையங்களில் இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்படுகிறது.

தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில்...

* சென்னையில் உள்ள இந்திய தேசிய மருத்துவ கவுன்சிலின் கீழ் வரும் காசநோய்க்கான தேசிய ஆராய்ச்சி நிறுவனம். (இதற்கான அனுமதியை கடந்த 15ம் தேதி தமிழக அரசு வழங்கியுள்ளது)

* அகமதாபாத்தில் (குஜராத்) உள்ள தேசிய தொழில்சார் சுகாதார நிறுவனம்.

* போபாலில் (மத்திய பிரதேசம்) உள்ள சுற்றுச்சூழல் சுகாதார ஆராய்ச்சிக்கான தேசிய நிறுவனம்.

* மும்பையில் (மகாராஷ்டிரா) உள்ள ஜிஎஸ் மருத்துவ கல்லூரி மற்றும் கேஈஎம் மருத்துவமனை.

* ஜோத்பூரில் (ராஜஸ்தான்) அமைந்திருக்கும் தொற்று நோயற்ற நோய்கள் குறித்த தேசிய ஆராய்ச்சி நிறுவனம்.

* டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை.

* 6 மாதம் கண்காணிப்பு

பிசிஜி தடுப்பு மருந்து வழங்கப்படும் தன்னார்வல முதியவர்களின் உடல்நிலை தொடர்ந்து 6 மாதங்களுக்கு கண்காணிக்கப்படும். அவர்களில் யாராவது பிசிஜி வழங்கப்பட்ட பின் கொரோனாவால் பாதிக்கப்பட்டால், அவர்களின் உடல்நிலை பிசிஜி வழங்கப்படாத அதே வயது நபருடன் ஒப்பிடப்படும். அப்போது, பிசிஜி வழங்கப்பட்டவர்களின் உடல் நிலை நன்றாக உள்ளதா என ஆய்வின் மூலம் மதிப்பீடு செய்யப்படும்.

* மைக்கோபாக்டீரியம் போவிஸ் என்பது உட்பட மொத்தம் 5 வகையான பாக்டீரியாவால் காசநோய் ஏற்படுகிறது.

* பிசிஜி தடுப்பூசி, பிரெஞ்சு ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.

* பிறந்த பச்சிளம் குழந்தை முதல், 5 வயது சிறுவர்களுக்கு இது போடப்படுகிறது.

* இந்த மருந்தினால் பக்கவிளைவுகள் இல்லை.

Related Stories: