மேட்டூர் அருகே கண்துடைப்புக்காக செக்போஸ்ட் தமிழக-கர்நாடகா எல்லை வழியாக ஜோராக நடக்கும் கனிமக்கடத்தல்: கொரோனா கட்டுப்பாடு எல்லாம் காற்றில் பறக்குது

மேட்டூர்: சேலத்தை அடுத்த மேட்டூர் அருகே கொரோனா ஊரடங்கை பயன்படுத்தி தமிழகத்திலிருந்து பலகோடி மதிப்பிலான கனிமங்கள் கர்நாடக மாநிலத்திற்கு கடத்தப்படுவதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது. கொரோனா பரவலை தடுக்க  மத்திய மாநில அரசுகள் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லவும் தடை விதித்ததோடு ஞாயிற்றுக் கிழமைகளில் தளர்வில்லா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசின் இந்த கட்டுப்பாடுகளை மதிக்காமல்  தமிழக- கர்நாடக எல்லையில் மேட்டூரை அடுத்த கொளத்தூரில் உள்ள காரைக்காடு சோதனைச்சாவடி வழியாக கனிமக் கடத்தல் ஜோராக நடைபெறுகிறது.

ஜல்லி, மணல், கருங்கல், மற்றும் எம் சான்ட் ஆகியவை தடையின்றி கடத்தப்பட்டு வருகிறது. நாள் ஒன்றுக்கு 50 லோடுகள் முதல் 100 லோடுகள் வரை டாரஸ் லாரிகளிலும், டிப்பர் லாரிகளிலும் கடத்தப்படுகின்றன. இந்த கனிமங்கள் கொளத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கல் குவாரிகளிலிருந்து அனுமதி இன்றியும்,  பகல் இரவு என பாகுபாடின்றியும்  24 மணிநேரமும்  நடைபெறுகிறது. சேலம் மாவட்ட எல்லையான தமிழக பகுதியில் உள்ள காரைக்காடு சோதனைச்சாவடியில்  மேட்டூர் மதுவிலக்கு போலீசாரும், வருவாய்த்துறையினரும் கண்காணிப்பு பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் கண்காணிப்பு இருக்கும் போதே கடத்தல் தடையின்றி நடைபெறுகிறது.

சோதனைச்சாவடி வழியாகவே எவ்வித ஆவணங்கள் இல்லாமலும், இ-பாஸ் இல்லாமலும் சர்வ சாதாரணமாக ஜல்லி, மணல், கருங்கல் மற்றும் எம் சாண்ட் கடத்தல் லாரிகள் கர்நாடக மாநிலம் சென்று திரும்புகின்றன. கொரோனா ஊரடங்கு காலத்தில் மட்டும் பலகோடி ரூபாய் மதிப்பிலான தமிழக கனிமங்கள் கர்நாடக மாநிலத்திற்கு கடத்தப்பட்டுள்ளது. இதனால் காவல்துறையும், வருவாய்த்துறையும் கடத்தலுக்கு துணைபோவதாக புகார்கள் எழுந்துள்ளது. இது குறித்து அப்பகுதி சமூக ஆர்வலர்களும், விவசாயிகளும் தொடர்ந்து உயரதிகாரிகளுக்கு புகார் அளித்தும் பலனில்லை என்பதால் கடும் அதிருப்தியில் ஆழ்ந்துள்ளனர்.

இது குறித்து காரைக்காடு பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் பாலசுப்ரமணியன் கூறியதாவது: காரைக்காடு சோதனைச்சாவடிக்கு காவல் உயர் அதிகாரிகள் திடீர் விசிட் வரும்போது முன்கூட்டியே சோதனைச்சாவடி போலீசாருக்கு தகவல் அளிக்கப்படுகிறது. அப்போது கனிமகடத்தல் லாரிகளை மறைவான இடத்தில் நிறுத்த சோலீசார் தொலைபேசி மூலம் தகவல் அளித்து விடுகின்றனர். இதனால் கடத்தல் எவ்வித பாதிப்பும் இல்லாமல் நடைபெறுகிறது. பாலாற்றில் உள்ள வனத்துறை சோதனைச்சாவடியில் கர்நாடக மாநில வனத்துறை மற்றும் காவல்துறையினர் கண்காணிப்பு போடப்பட்டுள்ளது.

இவர்கள் இறப்பு நிகழ்ச்சி மற்றும் திருமணங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு செல்லும் பொதுமக்களை இ-பாஸ் இல்லாமல் அனுமதிப்பதில்லை. ஆனால் தமிழகத்தில் இருந்து வரும் கனிமகடத்தல் லாரிகளை எந்த சோதனையுமின்றி அனுமதிக்கின்றனர். இதனால் சோதனைச்சாவடியில் உள்ள காவலர்கள் நாள் ஒன்றுக்கு பல ஆயிரம் ரூபாய் பிரதிபலனாக பெறுகின்றனர். கட்டுக்கடங்காமல் கொரோனா பாதிப்பும் உயிரிழப்பும் தொடரும் நிலையில் தமிழகத்திலிருந்து கர்நாடகம் சென்று வரும் லாரி டிரைவர் கிளீனர்களாலும் பாரம் ஏற்றி இறக்கும் தொழிலாளர்களாலும் மேட்டூர், கொளத்தூர் பகுதிகளில் கொரோனா பரவும் அபாயம் உள்ளது.

எனவே சேலம் மாவட்ட காவல்துறையும் வருவாய்த்துறையும் உரிய கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே தமிழக கனிமங்கள் கர்நாடகத்திற்கு கடத்துவதை தடுப்பதோடு கொரோனா பரவலையும் கட்டுப்படுத்த முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: