மின்கட்டண கொள்ளையை கண்டித்து 21ம் தேதி ஆர்ப்பாட்டம் கருப்புக் கொடி ஏற்றுவோம்; கண்டன முழக்கம் எழுப்புவோம்: திமுக தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: தமிழக அரசின் மின்கட்டண கொள்ளையை கண்டித்து நாளை மறுநாள் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கருப்புக் கொடி ஏற்றுவோம், கண்டன முழக்கம் எழுப்புவோம் என்று திமுக தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.  திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியருப்பதாவது:

தமிழ்நாட்டை ஆளும் அதிகாரத்தில் அதிமுக இருந்தாலும், மக்களின் மனதில் நம்பிக்கைக்குரிய இயக்கமாக இருப்பது எதிர்க்கட்சியான திமுக தான். அதனால், மக்கள் பிரச்னைகள் ஒவ்வொன்றிற்கும் முதல் குரல், திமுகவிடமிருந்தே வெளிப்படுகிறது. தீர்வுக்கான வழிமுறைகளையும் முன்வைக்கிறோம்.

அதனைச் செவிமடுக்கும் அரசியல் பக்குவமின்றி, மிச்சமிருக்கும் பதவிக்காலத்தில் சொச்சமிருக்கும் கஜானா இருப்பை எப்படி கரைத்துச் சுரண்டிக் கொழுக்கலாம் என்பது மட்டுமே இந்தக் கொரோனா கொடுங்காலத்திலும் அதிமுக ஆட்சியாளர்களின் ஒற்றைக் கொள்கையாக  இருக்கிறது. மரம் சும்மா இருந்தாலும் காற்று விட்டு வைப்பதில்லை என்பதுபோல எதிர்க்கட்சியான நமக்குப் பணிகள் மிகுந்துள்ளன. மக்களின் எதிர்பார்ப்பும் வளர்ந்துவருகிறது.  ஜூலை 16ம் நாள் காணொலி வாயிலாக நடைபெற்ற திமுக மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் அடங்கிய ஆலோசனைக் கூட்டத்தில் பயன்தரும் பத்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

10வது தீர்மானமாக, கொரோனா ஊரடங்கு காலத்தில் மக்களை வஞ்சித்து கொள்ளையடிக்கும் மின்கட்டண முறைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஊரடங்கு காலத்தில் அத்தியாவசியத் தேவைகளுக்காக வெளியே செல்லும் மக்களுக்கும் அபராதம் விதிப்பு வாகனங்கள் பறிப்பு எனத் தண்டனை வழங்கி வரும் அதிமுக அரசு, வீட்டுக்குள்ளேயே இருக்கும் மக்களிடம், மின்சாரத்தை கூடுதலாகப் பயன்படுத்தியதாகப் பல மடங்கு கட்டணம் வசூலிப்பது தமிழ்நாடு முழுவதும் மின்சார ‘ஷாக்’கை விட பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதை கூட்டத்தில் பங்கேற்றவர்கள் விரிவாக எடுத்துரைத்தனர்.

ஊரடங்கினால் தொழில்கள் முடக்கப்பட்டு, வணிகம் பாதிக்கப்பட்டு, அன்றாட வேலைவாய்ப்புகள்  அற்றுப் போயுள்ள நிலையில், கொரோனா காலத்தைச் சிறப்பு நேர்வாகக் கருதி மின்கட்டணச் சலுகை அளிக்கவேண்டிய அதிமுக அரசோ, நாங்கள் முறையாகக் கணக்கீடு செய்துள்ளோம் என நீதிமன்றத்தில் தெரிவித்து, அதனையே செய்திக் குறிப்பாகவும் வெளியிட்டு, மக்களிடம் கட்டணக் கொள்ளை அடிப்பதிலேயே கவனம் செலுத்துகிறது. மத்தியப் பிரதேசம், கேரளம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்கள் கொரோனா கால மின்கட்டணச் சலுகையை அளித்துள்ள நிலையில், அதிமுக அரசு மட்டும் மின் கணக்கீட்டின் அடிப்படையில் கட்டணத்தைச் செலுத்தியே ஆக வேண்டும் என்று சுமையை ஏற்றுவது கருணையற்ற போக்காகும்.

இதனைக் கண்டிக்கும் வகையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், “ரீடிங் எடுத்ததில் உள்ள குழப்பங்களை நீக்கி, மின் நுகர்வோருக்குச் சாதகமான முறையில் கணக்கிட்டு - ஊரடங்கு கால மின்கட்டணத்தைக் குறைக்க வேண்டும். குறிப்பாக, முந்தைய மாதத்திற்கு செலுத்திய பில் கட்டணத்தைக் குறைப்பதற்குப் பதில் அந்தத் தொகைக்குரிய யூனிட்டுகளை கழிக்க வலியுறுத்தியும், அப்படிக் குறைக்கப்பட்ட மின் கட்டணத்தை எளிய மாதத் தவணையாகச் செலுத்த மக்களுக்கு அனுமதி வழங்கக் கோரியும் 21ம் தேதி காலை 10 மணி அளவில் தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளின் முன்பும் கருப்புக் கொடி ஏற்றுவதோடு, கண்டன முழக்கங்களை எழுப்பிப் போராடுவது’ எனத் தீர்மானிக்கப்பட்டது.

திமுக அறிவித்துள்ள போராட்டத்தின் அடிப்படை நியாயத்தை, மின்கட்டணக் கொள்ளையால் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ள அனைத்துத் தரப்பு மக்களும் உணர்ந்துள்ளனர். அதனால் தான் தன்னிச்சையாக அவர்களிடமிருந்து ஆதரவுக் குரல்கள் பெருகி வருகின்றன. இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாத ஆட்சியாளர்கள், நீதிமன்ற உத்தரவுக்கு மாறாக திமுக போராட்டம் அறிவித்திருப்பது போலக் கயிறு திரிக்கிறார்கள். மின் கணக்கீடு  குறித்த தமிழக அரசின் நடைமுறையை ஏற்றுக்கொண்டுள்ள உயர்நீதிமன்றம், இதில் நுகர்வோருக்கு ஏற்படும் சிக்கல்களை அரசும் மின்வாரியமும் தீர்த்திட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. கணக்கீட்டில் ஏற்பட்டுள்ள குழப்பங்களையும், பிழைகளையும் நீக்கி, கொரோனா காலத்தில் அனைத்துத்தரப்பினருக்கும் வருமானம் குறைந்துள்ள சூழலில் மின்கட்டணத்தில் சலுகை அளிக்க வலியுறுத்தியும் வெகுமக்கள் பக்கம் நின்று திமுக போராடுகிறது.

உயர்நீதிமன்றத் தீர்ப்பு பற்றி கழகத்திற்கு வகுப்பெடுக்க நினைக்கும் இதே அதிமுக அரசுதான், கொரோனா பரவல் காரணமாக டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என உத்தரவிட்டபோது, அதனை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை  சென்றது. டாஸ்மாக் மதுபானக் கடைகளைத் திறப்பது தங்களின் கொள்கை முடிவு என வாதாடி, மதுக்கடைகளைத் திறந்து கொரோனா பரவலுக்குக் காரணமாக இருந்தது. டாஸ்மாக் விற்பனைக்காகக் கொள்கை முடிவு எடுக்கும் அதிமுக அரசு, மக்களை வதைக்கும் மின்கட்டணக் கொள்ளையைத் தவிர்க்கக் கொள்கை முடிவு ஏதேனும் வைத்திருக்கிறதா? அல்லது கொள்ளைக்கணக்கு  ஒன்றை மட்டுமே முடிவாகக் கொண்டிருக்கிறதா? என்பதே மக்கள் எழுப்பும் வினா.

மக்களின்  அந்தக் கேள்விக்குப் பக்கபலமாக, அவர்களின் கோரிக்கைகளுக்குப் பாலமாக, பொறுப்புள்ள எதிர்க்கட்சியாகத் திமுக ஜூலை 21ம் தேதி நடத்துகின்ற கருப்புக்கொடி அறப்போரில், திமுக நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்பதுடன், பொதுமக்களிடமும் அதற்கான ஆதரவைத் திரட்டும் வகையில் துண்டறிக்கைகளை வழங்கிட வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் கருப்புக் கொடி பறந்திடும் வகையில் மக்களின் பங்கேற்பு அமைந்திட வேண்டும். இவ்வாறு  கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: