அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கோவை, மதுரை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

சென்னை: அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கோவை, மதுரை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர தமிழகம், புதுச்சேரி, காரைக்கால், நீலகிரி, கோவை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை மாவட்டங்களின் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், இதர மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

நீலகிரி, கோவை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்யும். நாளை(19.07.2020) உள் தமிழகம், தெற்கு கடலோர தமிழகம், நீலகிரி, கோவை, மதுரை, தேனி, சேலம், தர்மபுரி மாவட்டங்களின் ஒருசில இடங்களில் லேசானது மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, மதுரை, தேனி, சேலம், தர்மபுரி மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலையாக 32 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியசும் நிலவக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தேவலாவில் 10 செ.மீ மழை பதிவாகியுள்ளது. அதேபோல், ஹாரிசன் மலையாளம் லிமிடெட் சேர்முல்லை, அவலாஞ்சி, வட்டாட்சியர் அலுவலகம், பந்தலூர் பகுதிகளில் தலா 5 செ.மீ மழையும், நடுவட்டம் பகுதியில் 4 செ.மீ  மழையும் பதிவாகியுள்ளது. மேலும், கூடலூர் பஜார், சின்னக்கல்லார், வுட் பிரேயர் எஸ்டேட், மேல் பவனி பகுதிகளில் தலா 3 செ.மீ  மழை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கான  எச்சரிக்கை

ஜூலை 18, 19 தேதிகளில் தென்மேற்கு மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 50-60 கிலோமீட்டர் வேகத்திலும், மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 40-50 கிலோமீட்டர் வேகத்திலும், கர்நாடகா, கேரளா கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். ஜூலை 21ம் தேதி தென்மேற்கு, மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 50-60 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

அதேபோல் கர்நாடகா, கேரளா கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று 40-50 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். ஜூலை 22ம் தேதி, தென்மேற்கு, மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்திலும், கர்நாடகா, கேரளா கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று 40-50 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே, மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்லவேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: