கொரோனா தொற்று; தக்கலை காவல் நிலையம் அரசுப்பள்ளிக்கு இடமாற்றம்..35 பேருக்கு சளி பரிசோதனை

தக்கலை: தக்கலை ஏட்டு ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் காவல் நிலையம் மூடப்பட்டது. இதையடுத்து தற்காலிகமாக தக்கலை அரசு மேல்நிலைப்பள்ளியில் செயல்படத் தொடங்கியது. குமரி மாவட்டத்தில் கொரோனா  தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதில் அரசு  ஊழியர்கள், காவலர்கள், பல தரப்பு மக்கள் வரை தொற்று ஏற்படுகிறது. கொரோனா தொற்று காரணமாக குமரி மாவட்டத்தில் இது வரை 5 காவல் நிலையங்களுக்கு பூட்டு  போடப்பட்டுள்ளது. இதனிடையே தக்கலை காவல் நிலையத்தில் பணி புரியும் இரு ஏட்டுக்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் அவர்களாகவே பரிசோதனை மேற்கொண்டனர். இதில் கருங்கல் பகுதியைச் சேர்ந்த ஏட்டுக்கு தொற்று  உறுதியானது.

இதனால் அவர் சிகிச்சைக்கு அழைத்து செல்லப்பட்டார். இதையடுத்து  பத்மநாபபுரம் நகராட்சியினர் காவல் நிலைய வளாகத்தில் பிளீச்சிங் பவுடர் போட்டு கிருமி நாசினி தெளித்தனர். தொடர்ந்து காவல்நிலையம் மூடப்பட்டது. தற்காலிக காவல் நிலையம் தக்கலை அரசு மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் செயல்படத் தொடங்கியது. இந்நிலையில் தக்கலை காவல் நிலையத்தில் பணிபுரிந்த ஒரு சிலர் தாங்களாகவே தக்கலை அரசு மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்தனர். இதனிடையே தக்கலை வட்டார மருத்துவகுழுவினர் டாக்டர் அருண் தலைமையில் தக்கலை காவல் நிலைய அதிகாரிகள், ஊர்க்காவல் படையினர் என 35 பேருக்கு சளி மாதிரி எடுத்துச் சென்றனர்.

கொரோனா வார்டில் 52 பேர் அனுமதி

தக்கலையில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் கொரோனா  வார்டில் நேற்றைய நிலவரப்படி 15 பெண்கள் உட்பட 52 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்காக டாக்டர்கள், நர்சுகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கொரோனா வார்டு அமைக்கப்பட்டுள்ளதால் உள் நோயாளிகள் வருகை குறைந்துள்ளது. மெயின் வாசலும் பூட்டப்பட்டு அவரச சிகிச்சைக்காக மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். இது தொடர்பாக மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர்  ராஜைய்யனிடம் கேட்ட போது, முக்கிய அறுவை சிகிச்சைகள் நடைபெறுகிறது.  மகப்பேறு பிரிவு, டயாலிசிஸ் பிரிவு ஆகியன செயல்படுகிறது. உள் நோயாளிகள் வருகை குறைந்துள்ளது என்றார்.

Related Stories: