திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விஐபி தரிசனத்தால் அர்ச்சகர்களுக்கு கொரோனா: தேவஸ்தானம் மீது ரமணதீட்சிதலு குற்றச்சாட்டு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விஐபி தரிசன அனுமதியால் அர்ச்சகர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக தேவஸ்தானம் மீது ரமணதீட்சிதலு குற்றம்சாட்டியுள்ளார்.  திருப்பதி தேவஸ்தான கவுரவ தலைமை அர்ச்சகர் மற்றும் ஆகம ஆலோசகர் ரமணதீட்சிதலு நேற்று முன்தினம் இரவு நிருபர்களிடம் கூறியதாவது:

ஏழுமலையான் கோயில் அர்ச்சகர்கள் 50 பேரில் 17 பேருக்கு தொற்று உறுதியானது. இன்னமும் பலரது முடிவுகள் வரவில்லை. விஐபி தரிசனம் என்ற பெயரில் 500 தரிசன டிக்கெட் பெற்றவர்கள் மற்றும் 10 ஆயிரம் நன்கொடை வழங்கிய பக்தர்களை சிறப்பு தரிசனம் என்ற பெயரில் அனுமதித்ததே அர்ச்சகர்களுக்கு தொற்று ஏற்பட காரணமாக அமைந்தது.  

12 ஆயிரம் பேர் வரை தரிசனம் செய்யும் கோயிலில் கண்துடைப்புக்காக வெறும் 30 பேருக்கு மட்டும் பரிசோதனை செய்து விட்டு எந்த பக்தருக்கும் தொற்றில்லை என தேவஸ்தானம் விளக்கம் கொடுத்து வருகிறது. குறிப்பாக விஐபி தரிசன பக்தர்கள் சுவாமிக்கு அருகில் நின்று தரிசிப்பதால் அர்ச்சகர்களுக்கு தொற்று ஏற்பட்டது. எனவே ஒட்டுமொத்தமாக பக்தர்களை அனுமதிப்பதை நிறுத்தவேண்டும்.  இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: