மழைநீரில் மிதக்கும் படுக்கைகளில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் உஸ்மானியா மருத்துவமனை!: ஐதராபாத்தில் அவலம்!

ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உஸ்மானியா மருத்துவமனைக்குள் மழைநீர் புகுந்ததால் நோயாளிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்தியாவின் வடமாநிலங்களில் பருவமழையானது துவங்கியுள்ளது. தொடர்ந்து, பீகார், அசாம், டெல்லி, மஹாராஷ்டிரா, உத்திரபிரதேசம், மத்திய பிரதேசம் போன்ற பல்வேறு மாநிலங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. ஐதராபாத்தில் சிலமணி நேரம் பெய்த மழைக்கு உஸ்மானியா அரசு மருத்துவமனை வெள்ளக்காடானது.  

நாட்டின் மிக பழமை வாய்ந்த மருத்துவமனைகளில் ஒன்றான இதில், உள்நோயாளிகள் மற்றும் வெளி நோயாளிகள் உள்ளிட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதேபோன்று கொரோனா பாதித்த நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நோயாளிகள் சிகிச்சை பெரும் வார்டிலும் மழைநீர் புகுந்தது. இதனால் மழை நீரிலேயே நோயாளிகள் சிகிச்சைபெறக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் மருத்துவமனை வளாகத்தில் உள்ள கழிவுநீரும் சேர்ந்ததால் நோயாளிகளும் , மருத்துவர்களும் கடும் சிரமத்தை எதிர்கொண்டனர்.

மருத்துவர்களும், செவிலியர்களும் வார்டுகளுக்கு வருவதை தவிர்ப்பதாக நோயாளிகள் குமுறலை வெளிப்படுத்தியுள்ளனர். அத்துடன் தொற்று நோய் பரவக்கூடிய அபாயம் உள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அரசு இதன் மீது கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர். இந்த மருத்துவமனையில் கொரோனா வார்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களுடன், சிகிச்சை பெறும் நோயாளிகளும் பல மணிநேரம் ஒன்றாக இருந்தது நேற்று சர்ச்சையை ஏற்படுத்தியது.  இந்த நிலையில், மருத்துவமனைக்குள் வெள்ள நீர் தேங்கி கூடுதல் பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: