பெற்ற குழந்தையை நண்பர் வளர்த்ததால் ஏற்பட்ட விபரீதம்; மகனை கூண்டில் அடைத்து வெந்நீர் ஊற்றி கொன்ற தம்பதி: 27 ஆண்டு சிறை தண்டனை விதித்தது சிங்கப்பூர் நீதிமன்றம்

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் பெற்ற குழந்தையை நண்பரிடம் வளர்க்க கொடுத்ததால் ஏற்பட்ட விபரீதத்தில், தம்பதியர் தங்களது மகனை கூண்டில் அடைத்து வெந்நீர் ஊற்றிக் கொன்றனர். இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவர்களுக்கு 27 ஆண்டு சிறை தண்டனை வழங்கி பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது. சிங்கப்பூரின் தோ பாயோ பகுதியை சேர்ந்தவர் ரிட்சுவான் அப்துல் ரஹ்மான் (28). இவரது மனைவி அஸ்லின் அருஜுனா (28). இருவருக்கும் ஓர் ஆண் குழந்தை பிறந்தது. ஒரு சில மாதங்களில் அந்த குழந்தையை குடும்ப நண்பர் ஒருவர் வளர்ப்பதாக தெரிவித்துள்ளார். அதற்கு இருவரும் சம்மதித்து, குழந்தையை நண்பரிடம் ஒப்படைத்தனர்.

அந்த குழந்தையும் பெற்றோரின் நண்பர் வீட்டில், அவர்களின் குழந்தையோடு ஒன்றாக வளர்ந்தது. 5 வயது பூர்த்தியான உடன் அந்த குழந்தையை பள்ளியில் சேர்ப்பதற்காக மீண்டும் நண்பரிடம் இருந்து தங்கள் குழந்தையை பெற்றோர் அழைத்து வந்தனர். ஆனால், குழந்தை நண்பரை விட்டு பிரிய மனமில்லாமல் வருத்தத்தில் இருந்தது. இதையறிந்த நண்பர், குழந்தையை பள்ளியில் தானே சேர்த்து பாதுகாத்து வருவதாகவும், அதற்கான ஒப்புதல் சான்று (பாதுகாவலர்) வழங்குமாறும் தம்பதியிடம் கேட்டுள்ளார். ஆனால், அவர்கள் சம்மதிக்கவில்லை. இதனால், குடும்பத்தில் தங்கள் மகனால் ஏற்பட்ட பிரச்னையில் தம்பதியருக்குள் தகராறு வருவதுண்டு.

இந்நிலையில், கடந்த 2016ம் ஆண்டு அக்டோபர் 15ம் தேதிக்கும் அக்டோபர் 22ம் தேதிக்கும் இடைப்பட்ட காலக்கட்டத்தில் மகனை அடித்து துன்புறுத்தி வந்தனர். ஒருகட்டத்தில் மகன் மீது வெந்நீரை ஊற்றி காயம் ஏற்படுத்தி அவனை துடிதுடிக்கச் செய்துள்ளனர். மேலும், ஒரு மீட்டர் உயரமுள்ள அந்தச் சிறுவனை 91 செ.மீ நீளமும் 58 செ.மீ. அகலமும் 70 செ.மீ. உயரமும் கொண்ட சிறிய கூண்டுக்குள் அடைத்துக் கொடுமைப்படுத்தினர். 5 வயதான பெற்ற மகன் என்றுகூட பாராமல் அவன் உயிர் போகும் ஆபத்தான நிலை வரையிலும் பலமுறை அவன்மீது வெந்நீரைக் கொட்டி கொடுமைப்படுத்தினர்.

கடைசியாக அக். 22ம் தேதி நடந்த சம்பவத்தின்போது மயங்கிய சிறுவனை, ஏழு மணி நேரத்திற்குப் பிறகு அந்தத் தம்பதியர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். சிறுவனின் உடலில் முக்கால்வாசி பகுதி வெந்நீர் பட்டு வெந்து போயிருந்தது. அவனுக்கு ஏற்பட்டிருந்த கடுமையான காயங்களால் அவன் உயிர் பிரிந்தது. போலீசாரின் விசாரணையின் போது, அந்த சிறுவனை தம்பதியினர் பல வழிகளிலும் கொடுமைப்படுத்தியது தெரியவந்துள்ளது. மேலும், துடைப்பக் குச்சியைக் கொண்டு அடித்து, கரண்டியைக் காயவைத்து உள்ளங்கையில்சூடு வைத்து கொடுமைப்படுத்தியதும் விசாரணையில் அம்பலமானது. போலீசார், தம்பதியினரை கைது செய்து வழக்கு தொடர்ந்தனர்.

அந்நாட்டின் உயர்நீதிமன்ற நீதிபதி வெலரி முன் நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அவர் அளித்த தீர்ப்பில், ‘ஒரு மீட்டர் உயரமுள்ள அந்தச் சிறுவனை சிறிய கூண்டுக்குள் அடைத்துக் கொடுமைப்படுத்தியது கொடூரச்செயலின் உச்சம். கடுமையான காயம் விளைவித்தது, தீப்புண் ஏற்படுத்தியது போன்ற கொடூரமான குற்றங்களைப் புரிந்துள்ளனர். அதனால்,  குற்றம் சாட்டப்பட்ட ரிட்சுவான் அப்துல் ரஹ்மானுக்கு 27 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 24 பிரம்படியும் கொடுக்க வேண்டும். அவரது மனைவி அஸ்லின் அருஜுனாவுக்கு 27 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், பிரம்படிகளுக்குப் பதிலாக கூடுதலாக ஓர் ஆண்டுச் சிறைத் தண்டனையும் விதிக்கப்படுகிறது’ என்று நீதிபதி வெலரி தீர்ப்பளித்தார்.

Related Stories: