திருச்சியில் swiggy நிர்வாகம் ஊதியத்தை குறைத்து விட்டதாக பணியாளர்கள் போராட்டம்!!

திருச்சி:  திருச்சியில் ஸ்விகி நிர்வாகம் ஊதியத்தை குறைத்த காரணத்தினால் உணவு விநியோக ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் பிரபலமான ஸ்விகி நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 300க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் ஸ்விகி நிர்வாகம், ஊழியர்களுக்கு வழங்கக்கூடிய அடிப்படை ஊதியம், வார ஊக்கத்தொகை மற்றும் மாத ஊக்கத்தொகை உள்ளிட்டவற்றை குறைத்துள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த உணவு விநியோக ஊழியர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து, பிற மாவட்டங்களில் இதுபோன்ற ஊதிய குறைப்பு எதுவும் செய்யபடவில்லை என ஊழியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், இதுபோன்ற ஊதிய குறைப்பால் தங்களது வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பெட்ரோல், டீசல் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு, நிர்வாகத்தில் கொடுக்கப்படும் ஊதியமானது சரியாக உள்ள நிலையில், குடும்ப செலவுகளை பூர்த்தி செய்ய தினந்தோறும் திண்டாடி வருவதாக அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதனைத்தொடர்ந்து, கொரோனா காலத்திலும் மருத்துவமனை உள்ளிட்ட இடங்களுக்கும் எவ்வித வேறுபாடும் காட்டாமல் ஊழியர்கள் தங்களது வேலைகளை சரிவர செய்து வருகின்றனர்.  குறிப்பாக உணவு விநியோகத்தை ஊழியர்கள் இரவு நேரங்களிலும் செய்து வருகின்றனர். ஆனால், இதனை நிர்வாகம் சிறிதும் பொருட்படுத்தாமல் ஊதியத்தை குறைத்துள்ளது. நேற்றைய தினம் ஊதிய குறைப்பை நிர்வாகம் அறிவித்த நிலையில், ஊழியர்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

இருப்பினும், நிர்வாக அதிகாரிகள் உங்களுக்கு விருப்பம் இருந்தால் வேளையில் இருங்கள், இல்லையெனில் வேலையை விட்டு சென்று விடுங்கள் என கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், திருச்சியில் உள்ள மிக முக்கிய பகுதிகளான தில்லை நகர், கே.கே.நகர் மற்றும் காட்டூர் ஆகிய இடங்களில் உணவு விநியோகமானது பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: