செங்கல்பட்டில் 2 நாட்களாக கனமழை குடியிருப்பு பகுதி கால்வாய் உடையும் அபாயம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் 2 நாட்களாக பெய்து வரும் கனமழையால் குடியிருப்பு பகுதி கால்வாய் உடையும் அபாயம் உள்ளது. செங்கல்பட்டு அடுத்த திம்மாவரம் மகாலஷ்மி நகர் அருகில் கொளவாய் ஏரியில் இருந்து உபரியாக வடியும் தண்ணீர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து மழைக் காலங்களில் வடியும் மழைநீர் நீஞ்சல் மடு வழியாக சென்று பாலாற்றில் கலக்கும் வகையில் கால்வாய் உள்ளது. கடந்த 2 நாட்களாக நள்ளிரவில் பெய்த கனமழையால் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வடியும் மழைநீரும் கொளவாய் ஏரியில் இருந்து வடியும் உபரி நீரும் மகாலட்சுமி நகர் குடியிருப்பு பகுதிக்கு அருகில் உள்ள கால்வாய் முழுவதும் நிரம்பி அதை ஒட்டிய பகுதிகளில் வீட்டுக்குள் மழைநீர் புகுந்துள்ளது.

கால்வாயின் கரைகள் சரிந்துள்ளதால் சமீபத்தில் பெய்த சாதாரண மழைக்கே கரை உடையும் அபாயம் உள்ளது. இதனால் அப்பகுதி குடியிருப்புவாசிகள் இனி வருகிற பருவமழை காலங்களில் என்ன ஆகுமோ என மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

மேலும் இந்த வடிகால் மழைநீர் மக்களுக்கு பயன்படாமல் மழைநீரை தேக்கி வைக்க வழியில்லாமல் முறையாக தூர்வாரப்படாமல் மதகு முழுவதும் ஆகாயத்தாமரை மண்டிப்போய் தண்ணீர் முழுவதும் வீணாகிறது. அதனால் பொதுப்பணித்துறை மற்றும்  மாவட்ட நிர்வாகம் உடனடியாக இந்த பகுதியை ஆய்வு செய்து வரும் மழைக்காலத்தை கருத்தில் கொண்டு ஆகாயத்தாமரைகளை அகற்றி கால்வாயைச் சுற்றி முறையாக கரைகளை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: