ஆரணி கட்டிட தொழிலாளி கொலையில் கைது பிரசவ வார்டில் இருந்து கர்ப்பிணி கைதி தப்பி ஓட்டம்: வேலூர் அரசு மருத்துவமனையில் பரபரப்பு

வேலூர்: ஆரணி கட்டிட தொழிலாளி கொலை வழக்கில் கைதான கர்ப்பிணி, வேலூர் அரசு மருத்துவமனை பிரசவ வார்டில் இருந்து நேற்று காலை தப்பினார். ஆரணி சைதாப்பேட்டையைச் சேர்ந்தவர் சுரேஷ்(41), கட்டிட தொழிலாளி. சுரேஷூம், கிருஷ்ணவேணி என்ற பெண்ணும் காதலித்துள்ளனர். இந்நிலையில் குடிப்பழக்கம் இருந்ததால் சுரேசுடன் இருந்த தொடர்பை கிருஷ்ணவேணி நிறுத்தியுள்ளார். பின்னர் அவரது வீட்டின் அருகே சவுண்ட் சர்வீஸ் நடத்தி வந்த அஜித்குமாரை காதலித்துள்ளார். ஆனாலும் சுரேஷ் தினமும் போதையில் வந்து தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி தொல்லை கொடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்து காதலன் அஜித்குமாருடன் சேர்ந்து சுரேஷை அடித்துக்கொலை செய்தாராம்.

இதுகுறித்து ஆரணி டவுன் போலீசார் வழக்குப்பதிந்து அஜித்குமாரை  கைது செய்தனர்.  கிருஷ்ணவேணி, சென்னை கும்மிடிப்பூண்டியை சேர்ந்த எலக்ட்ரீஷியன் கோபி(27) என்பவரை திருமணம் செய்து அங்கு வாழ்ந்து வந்தார். அப்போது கர்ப்பிணியான அவரை ஆரணியில் உள்ள உறவினர்களை பார்க்க வந்தபோது ஆரணி டவுன் போலீசார் கைது செய்து வேலூர் பெண்கள் தனிச்சிறையில் அடைத்தனர். இந்நிலையில் கர்ப்பிணி கிருஷ்ணவேணி வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த 7ம் தேதி சேர்க்கப்பட்டார்.

நேற்று காலை மருத்துவமனையில் உள்ள கழிவறைக்கு சென்ற கிருஷ்ணவேணி அங்கு மாற்று ஆடை அணிந்துகொண்டு தப்பினார். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. புகாரின்படி வேலூர் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து கிருஷ்ணவேணியை தேடி வருகின்றனர்.

Related Stories: