அடிப்படை வசதிகள் இல்லாமல் ஆன்லைன் வகுப்புகள் தொடக்கம்...! கிராமப்புற மாணவர்களுக்கு உதவாது என கல்வியாளர்கள் கருத்து!!!

சென்னை: தமிழகத்தில் அடிப்படை வசதிகள் செய்து தராமல் ஆன்லைன் வகுப்புகளை தொடங்குவதால் மாணவர்களுக்கு எந்தவித பயனும் கிடைக்காது என்று கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த சில மாதங்களாகவே பள்ளி கல்லூரிகள் என அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாணவர்களின் கல்வியை கருத்தில் கொண்டு தனியார் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதேபோல் அரசு பள்ளி மாணவர்களும் பயன்பெறும் வகையில், வரும் 13ம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைப்பார் என பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அதற்குள் பாடபுத்தகங்கள் அனைத்தும் மாணவர்களுக்கு வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து, நகர்புறங்களிலே செல்போன் சிக்னல் கிடைப்பதில் குறைபாடு உள்ள நிலையில், கிராமப்புறங்களில் மாணவர்களிடம் செல்போன், லாப்டாப் இல்லாதது மற்றும் இணைய பயன்பாட்டிற்க்கான செலவுகள் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளால் ஆன்லைன் வகுப்புகளை செயற்படுத்துவதில் சிக்கல் உருவாகும் என கல்வியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில், தமிழக அரசு ஆன்லைன் வகுப்பிற்காக புதிதாக ஒரு செயலியை உருவாக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். மேலும், அதனை கண்காணிக்கும் வசதியையும் ஏற்படுத்தி அதன்பின் ஆன்லைன் வகுப்புகள் நடத்தினால் ஓரளவாவது மாணவர்களுக்கு பயன் கிடைக்கும் என்று அவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Related Stories: