சட்ட விரோதமாக சிறைகளில் உள்ள 129 வெளிநாட்டு இஸ்லாமியர்களை விடுவிக்க வேண்டும்: கே.பாலகிருஷ்ணன் முதல்வருக்கு கடிதம்

சென்னை: சட்ட விரோதமாக சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள 129 வெளிநாட்டு இஸ்லாமியர்களை விடுவிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து அவர் எழுதிய கடிதத்தில், இந்தோனேசியா, பிரான்ஸ், மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட 9 நாடுகளிலிருந்து தமிழகத்துக்கு ஆன்மீக பயணமாக வந்த 12 பெண்கள் உள்பட 129 இஸ்லாமியர்கள் மீது, தமிழகத்தில் 15 காவல்நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு சைதாப்பேட்டை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 98 பேருக்கு ஏற்கனவே நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

சென்னை மாநகராட்சி ஆணையரிடம் தங்கள் இருப்பிடத்தை தெரிவித்துவிட்டு சென்னை நகருக்குள் தங்கியிருக்க வேண்டும் என்கிற நிபந்தனை அடிப்படையில் சொந்தப் பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இப்படி பிணை வழங்கப்பட்ட பிறகும் மீண்டும் இவர்கள் அனைவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசின் தடுப்பு முகாம்கள் பற்றிய வழிகாட்டுதல்களை கவனத்தில் கொள்ளாமலும், நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாமலும் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இது தமிழக அரசு ஆன்மீக சுற்றுலா வந்தவர்களை வன்மத்துடன் அணுகுவதாகவே எண்ண தோன்றுகிறது. எனவே, உடனடியாக சிறையிலுள்ள அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் முதல்வருக்கு எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: