பூட்டியே கிடப்பதால் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிய கால்நடைத்துறை துணை இயக்குனர் அலுவலகம்: போளிவாக்கத்தில் அரசு பணம் ரூ.75 லட்சம் வீண்

திருவள்ளூர்:  திருவள்ளூர் அருகே போளிவாக்கம் ஊராட்சியில், கால்நடைத் துறை துணை இயக்குனர் அலுவலகம் பூட்டியே கிடப்பதால், சமூக விரோதிகளின் புகலிடமாகவும், மது அருந்தும் பார் ஆகவும் மாறியுள்ளது. கடம்பத்தூர் ஒன்றியத்தில் உள்ளது போளிவாக்கம் ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதூர் மாநில நெடுஞ்சாலையில், கால்நடைத் துறைக்கு சொந்தமான கோழி விரிவாக்க நிலையம் உள்ளது. கடந்த, 2002-03ம் ஆண்டு வறட்சி நிவாரணப் பணி திட்டத்தின் கீழ் இங்கு, கோழி விரிவாக்க நிலையத்துடன், கோழிகளை பராமரிக்க காற்றோட்டத்துடன் கூடிய தனி கட்டிடமும், தீவனப் புல் பண்ணையும் அமைக்கப்பட்டது.

துவக்கத்தில் இயங்கிய இந்த நிலையம், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் எவ்வித அறிவிப்பும் இன்றி மூடப்பட்டது. இந்நிலையில், அங்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் பல லட்சம் மதிப்பில் கால்நடைத்துறை துணை இயக்குனர் அலுவலகம், நவீன வசதிகளுடன் கட்டி திறக்கப்பட்டது. ஆனால், கட்டிடத்திற்கு சுற்றுச்சவர் இல்லாத நிலையில், அலுவலகமும் திறக்கப்படாமல் பூட்டியே கிடப்பதால், இரவு நேரங்களில் இங்கு சமூக விரோத செயல்கள் நடைபெறுவதாவும், குடிமகன்கள் ‘’பார்’’ ஆக பயன்படுத்துவதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

பராமரிப்பு இல்லாமல் மூடிக் கிடப்பதால், அலுவலகத்தை சுற்றிலும், செடி, கொடிகள் வளர்ந்து, பண்ணை இருக்கும் இடம் தெரியாமல் மூடிக் கிடக்கிறது. அலுவலக ஜன்னல்களும் உடைக்கப்பட்டு உள்ளன. இதனால் அரசு திட்டம் வீணாகி உள்ளது. தற்போது கிராமங்களில், வீடுகள்தோறும் நாட்டுக் கோழிகளை மக்கள் வளர்த்து வருகின்றனர். இதன் மூலம் முட்டைகளை அடை வைத்து கோழிகளின் இனப்பெருக்கத்தை அதிகரித்து வருகின்றனர். மேலும், நாட்டுக் கோழி முட்டைகளை ஒரு முட்டை, ஐந்து முதல், ஆறு ரூபாய் வரை விற்று குடும்ப செலவுகளை சரிசெய்து வருகின்றனர்.

கோழி விரிவாக்க நிலையம் உள்ள பகுதியில், காலியாக உள்ள இடத்தில், தீவனப்புல் வளர்க்கப்பட்டு வந்தது. இந்த புற்களை சிகிச்சைக்கு வரும் கால்நடைகள் சாப்பிட்டு வந்தன. அதோடு, கால்நடைகள் வைத்துள்ள விவசாயிகளுக்கு, தீவனப்புல் வளர்க்கும் முறை, புல் ரகங்கள் குறித்து செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டு வந்தது. தற்போது அதுவும் கிடையாது. எனவே, போளிவாக்கம் ஊராட்சியில் உள்ள கால்நடைத்துறை துணை இயக்குனர் அலுவலகத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவரவும், தீவன புல் பண்ணையை பயன்பாட்டுக்கு கொண்டுவரவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related Stories: