தடையை மீறி நடந்த ஆட்டுச்சந்தை அதிரடியாக அகற்றம்

திருப்புவனம்: திருப்புவனத்தில் கடந்த 10 மாதங்களுக்கு மேலாக பேரூராட்சி அனுமதியின்றி வாரச்சந்தை  நடந்து வந்தது. தடையை மீறி நடந்ததால் அகற்றப்பட்டது. திருப்புவனம் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. இவர்கள் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருப்புவனம் பகுதியில் கொரோனா தீவிரமாக பரவி வருவதற்கு செவ்வாய் கிழமைகளில் நடக்கும் ஆடு,கோழி, காய்கறி சந்தை, புதன் கிழமை கூடும் மாட்டுச்சந்தையிலும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவதே முக்கிய காரணம் என சுகாதாரத்துறை கருதியது.

இப்பகுதி மக்களும் வாரச்சந்தையை ரத்து செய்ய வேண்டும் என பேரூராட்சிக்கு புகார் தெரிவித்தனர். வாரச்சந்தையை ரத்து செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. அதன்படி பேரூராட்சி சந்தை ரத்து செய்வதாக கடந்த இரண்டு நாட்களாக ஒலி பெருக்கி மூலம் அறிவித்தனர். ஆனாலும் இன்று செவ்வாய் கிழமை என்பதால் அதிகாலையிலேயே வழக்கம் போல ஆட்டு சந்தைக்கு ஆயிரக்கணக்கான ஆடுகளும் வியாபாரிகளும் கூடிவிட்டனர். சந்தை ரத்து என்று அறிவித்த பின்னரும் கூடி விட்டதால் போலீசாரும், பேரூராட்சி ஊழியர்களும் அப்புறப்படுத்தினர். மறு அறிவிப்பு வரும் வரை  வாரச்சந்தை நடைபெறாது என பேரூராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

Related Stories: