சேதுக்கரை பெருமாள் கோயிலில் 300 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம்: பக்தர்கள் எதிர்பார்ப்பு

கீழக்கரை: ராமநாதபுரம் மாவட்டத்தில் பல வைணவத் திருக்கோயில்கள் உள்ளன. அவற்றுள் மக்களால் அதிகம் அறியப்படாத பழமையான கோயிலான சேதுக்கரை சின்னக்கோயில் என்றழைக்கப்படும் ஏகாந்த சீனிவாசப்பெருமாள் கோயில் ராமநாதபுரம் சமஸ்தானம், தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்டதாகும். இக்கோயிலில் 300 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடந்துள்ளது. அதற்கான கல்வெட்டுகளும் கோயில் நுழைவுவாயிலில் உள்ளன. மூலஸ்தான கோபுரக்கலசங்கள், கருவறை, முன்மண்டபம், அர்த்தமண்டபம், தாங்கி நிற்கும் சிற்பத்தூண்கள் பராமரிப்பின்றி கடும் மழை, வெயில், இயற்கை சீற்றங்களில் இருந்தும் நிற்பது ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகின்றது.

சமூக ஆர்வலர்கள் கூறியதாவது, ராமநாதபுரத்தில் இருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ள திருப்புல்லாணியில் இருந்து 2 கி.மீ. தொலைவில் சேதுக்கரை செல்லும் வழியில் பெரிய ஆலமரத்தின் எதிரே முன்புறத்தில் ஓட்டுக்கட்டிடமும், அதை தொடர்ந்து நீண்ட பிரகாரத்துடன் கூடியதாக இக்கோயில் அமைந்துள்ளது. ‘சேது ஹிமாச்சலா’ என்று வேதங்களில் இந்தியாவின் கடைசி தெற்குப்பகுதியாக சேதுக்கரை கூறப்படுகிறது. இங்கிருந்துதான் இலங்கைக்கு கடலில் பாலம் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. சேதுக்கரை கடற்கரையில்தான் ராவணனின் தம்பி விபீஷணன் ராமபிரானிடம் சரணடைந்ததாக கூறப்படுகிறது. கோயிலின் சிறப்பு தாயார் சன்னதி இல்லாமல் பெருமாள் மட்டும் காட்சியளிக்கிறார்.

ராமர் இங்கு வந்த போது தமிழ்முனிவர் அகத்தியர் ராமபிரானுக்கு ஆதித்ய ஹிருதய ஸ்தோத்திரம் வழங்கியதாக கூறப்படுகிறது. இக்கோயிலில் ஆதித்ய ஹிருதய ஸ்தோத்திரம் எனும் மந்திரம் உச்சரித்து வழங்கப்படும் துளசி தீர்த்தத்தில், கடுமையான காய்ச்சல், ஜலதோஷம், தலைவலியினை குணப்படுத்தி வருகிறது. இதன் மகத்துவம் அறிந்தவர்கள் துளசி தீர்த்தம் பெற்று செல்வதை வாடிக்கையாக கொண்டு வருகின்றனர். ஒரு கால பூஜையினை மட்டும் நாள்தோறும் செய்கின்றனர். கோயிலுக்கான கும்பாபிஷேகம் வேண்டி பல நூற்றாண்டாக காத்திருக்கிறது. எனவே தமிழக அரசின் இந்துசமய அறநிலையத் துறையினர் பார்வையில் இதுவரை இக்கோயிலின் சிறப்புகள் தெரியாமல் இருப்பது அதிசயமாகவே உள்ளது.

Related Stories: