கும்பகோணத்தில் தூய்மை பணியாளர்கள் வேலைநிறுத்தம்: ஆட்சியர் அறிவித்தபடி ஊதிய உயர்வு வழங்கவில்லை என புகார்!!!

கும்பகோணம்:  கும்பகோணத்தில் ஆட்சியர் அறிவித்த கூலியை தர மறுத்ததால், தூய்மை பணியாளர்கள் வெளிநடப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கும்பகோணம் மாவட்டத்தில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் தங்களுக்கு தினக்கூலியாக 385 ரூபாய் வழங்க  வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து மேலிடத்தில் கலந்துகொண்டு ஊதிய உயர்வை அதிகரிப்பதாக கூறியுள்ளார். பின்னர், தூய்மை பணியாளர்கள் வழக்கம்போல வேலைக்கு சென்றுள்ளனர். அப்போது, நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சேரும் குப்பைகளை அகற்றுவதற்காக புதிதாக ஒப்பந்த தொழிலாளர்களை நியமிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் வெளிநடப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், தங்களது வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுவதாக தொழிலாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தூய்மை பணியாளர்களிடம் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதில் உடன்பாடு இல்லாததால் தூய்மை பணியாளர்கள் தொடர்ந்து வெளிநடப்பு போராட்டம் நடத்துவதாக எச்சரித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து, கொரோனா பரவல் உச்சத்தில் உள்ள நிலையில், தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதால் சுகாதார சீர்கேடு நிலவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், போராட்டத்தில் ஈடுபடுவதாலும் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Related Stories: