கடலூர் என்.எல்.சி பாய்லர் வெடித்த விபத்தில் படுகாயமடைந்த மேலும் இருவர் பலி: உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக உயர்வு

கடலூர்: நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் நிகழ்ந்த கொதிகலன் வெடி விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்திருக்கிறது. ஜூலை 1ம் தேதி நெய்வேலி என்.எல்.சி அனல்மின் நிலையத்தில் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது 5-வது யூனிட்டில் 2வது பிரிவில் கொதிகலன் வெடித்து சிதறி விபத்துக்குள்ளானது.

இதில் 6 ஒப்பந்த தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 17 பேர்  தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களில் சிவகுமார் என்ற பொறியாளர் கடந்த 3ம் தேதி சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். மேலும், செல்வராஜ் என்ற ஒப்பந்தத் தொழிலாளியும், ரவிச்சந்திரன் என்ற பொறியாளரும் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தனர். 3 தொழிலாளர்கள் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துவிட்டதால் பலி எண்ணிக்கை 9 ஆக அதிகரித்திருந்தது.

அதனை தொடர்ந்து, இன்று காலை சென்னையில் சிகிச்சை பெற்று வந்த வைத்தியநாதன் என்ற என்.எல்.சி பணியாளர் உயிரிழந்திருக்கிறார். இதனால் நெய்வேலி நிலக்கரி சுரங்க கொதிகலன் வெடி விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்திருந்தது. இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒரு ஊழியர் உயிரிழந்துள்ளார். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து, தீ காயம் அடைந்துள்ள 13 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து தொடர்பாக முதன்மை பொது மேலாளர் கோதண்டம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பாய்லரை முறையாக பராமரிக்காத காரணத்தால் கோதண்டம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக என்.எல்.சி. நிர்வாகம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: