மின்சாரம் தாக்கி உயிரிழந்த மயிலுக்கு தேசியக் கொடி அணிவித்து மரியாதை செலுத்திய போலீசார்: கோவையில் நெகிழ்ச்சி

கோவை: கோவையில் உயிரிழந்த மயிலுக்கு போலீசார் தேசிய கொடி அணிவித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. கோவையில் டிரான்ஸ்பார்மரில் அடிபட்டு உயிரிழந்த மயிலுக்கு போலீசார் தேசியக்கொடி போர்த்தி மரியாதை செலுத்தி வனத்துறையிடம் ஒப்படைத்தனர். கோவை திருச்சி ரோட்டில் இருந்து எஸ்.ஐ.ஹெச்.எஸ். காலனி பகுதிக்கு செல்லும் வழியில் உள்ள பெட்ரோல் நிலையம் அருகே மின்மாற்றியில் பெண் மயில் ஒன்று அமா்ந்துள்ளது. அப்போது, உயா் அழுத்த மின் கம்பியின் மீது மயில் அமா்ந்ததால் திடீரென்று மின்சாரம் பாய்ந்து உடல் கருகி கம்பிகளுக்கு இடையே சிக்கித் தொங்கியது. தேசிய பறவையான மயில் மின்சாரத்தில் அடிபட்டு உயிரிழந்ததை பார்த்த அப்பகுதி மக்கள், சிங்காநல்லூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த சிங்காநல்லூா் ஆய்வாளா் முனீஸ்வரன், உதவி ஆய்வாளா் அா்ஜுன்குமார், தலைமைக் காவலா் சுகுமார் ஆகியோர் பின்னர் டிரான்ஸ்பார்மரை ஆப் செய்து மின்மாற்றியில் சிக்கிய மயிலின் பெண் உடலை பத்திரமாக மீட்டனர். தேசியப் பறவை என்பதால் இறந்த அந்த பெண் மயிலுக்கு தேசியக்கொடியை போர்த்தி  காவல் துறையினர் உரிய மரியாதை செலுத்தினர். பின்னர் மயிலின் உடல்  மதுக்கரை வனத்துறையினரிடம்  ஒப்படைக்கப்பட்டு, நன்முறையில் வனப்பகுதியில் புதைக்கப்பட்டது. மயிலுக்கு தேசியக்கொடி போர்த்தி அஞ்சலி செலுத்திய போலீஸாரின் செயலுக்கு சமூக ஆா்வலா்கள், இயற்கை ஆர்வலா்கள், மக்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Related Stories: