கொரோனா அதிகரிப்பு மற்றும் சாத்தான்குளம் சம்பவம் எதிரொலி கவர்னருடன் முதல்வர் எடப்பாடி திடீர் சந்திப்பு: எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கம்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது மற்றும் சாத்தான்குளத்தில் போலீசார் தாக்கியதில் 2 வியாபாரிகள் மரணம் எதிரொலியாக, தமிழக கவர்னரை முதல்வர் எடப்பாடி நேற்று மாலை திடீரென சந்தித்து பேசினார். அப்போது, இந்த சம்பவங்களில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்தார்.  தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை 5 மணிக்கு சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் திடீரென சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமை செயலாளர் சண்முகம், தமிழக டிஜிபி திரிபாதி ஆகியோர் உடன் இருந்தனர். இந்த சந்திப்பு சுமார் 30 நிமிடம் நடைபெற்றது.

 தமிழக கவர்னரை முதல்வர் எடப்பாடி சந்தித்து பேசியபோது, தமிழகத்தில் கொரோனா நோய் பாதிப்பு குறித்தும், எடுக்கப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்தார். சாத்தான்குளம் வியாபாரிகள் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக முதல்வரிடம் கவர்னர் கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து, சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி, இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து விசாரணை நியாயமாக நடைபெற்று வருவதாக முதல்வர் எடப்பாடி விளக்கம் அளித்ததாகவும் தெரிகிறது. தமிழக முதல்வரின் விளக்கத்தை, கவர்னர் பன்வாரிலால் அறிக்கையாக மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு தெரிவிப்பார்.

Related Stories: