2011 உலக கோப்பை பைனலில் முறைகேடா? சங்கக்கராவிடம் 10மணி நேரம் விசாரணை

கொழும்பு; இந்தியா வென்ற 2011 ஐசிசி உலக கோப்பை தொடரின் பைனலில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்ததை அடுத்து அமைக்கப்பட்டுள்ள விசாரணைக் குழு, இலங்கை வீரர் சங்கக்கராவிடம் 10 மணி நேரம் விசாரணை நடத்தியது.

மும்பையில் 2011ம் ஆண்டு ஐசிசி உலக கோப்பை போட்டியின் பைனல் நடந்தது. அதில் இலங்கை 6விக்கெட் இழப்புக்கு 274 ரன் எடுத்தது. சேசிங்கில் இந்திய தொடக்க ஆட்டக்காரர்கள் சேவக், சச்சின் ஆரம்பத்திலேயே ஆட்டமிழந்தனர். ஆனால் கம்பீர், டோனி இணை அதிரடியாக விளையாடியதால் இந்தியா 48.2ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 277 ரன் எடுத்து கோப்பையை முத்தமிட்டது. தங்கள் நாடு பைனலில் தோற்க, மேட்ச் பிக்சிங் தான் காரணம் என்று வழக்கம்போல் இலங்கையில் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில் போட்டி நடந்து பல ஆண்டுகள் கழிந்த நிலையில் இலங்கையின் முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர் மகிந்தநந்தா அலுத்காமகேதன், ‘2011 உலக கோப்பை பைனலில் நடந்த மேட்ச் பிக்சிங் பற்றி பேச இது சரியான தருணம் என்று நினைக்கிறேன். அந்தப் போட்டியில் வீரர்கள் யாரும் முறைகேட்டில் ஈடுபடவில்லை. ஆனால் அந்தப் போட்டியில் மேட்ச் பிக்சிங் நடந்துள்ளது’ என்று குற்றச்சாட்டை கூறியிருந்தார். இதையடுத்து சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவினர் இப்போது விசாரணையை தொடங்கியுள்ளனர். இலங்கை அணியை தேர்வு செய்த முன்னாள் தேர்வாளர் அரவிந்த் டி சில்வாவிடம் முதலில் விசாரணை நடந்தது. உபுல் தரங்காவிடமும் நேற்று முன்தினம்  2மணி  நேரம் விசாரணை நடந்தது.

அடுத்து அப்போதைய இலங்கை அணியின் கேப்டனாக இருந்த சங்கக்கராவிடம் விசாரணை செய்யப்பட்டது. சுமார் 10 மணிநேரம் நீடித்த இந்த விசாரணையின்போது அவரிடம் ஏராமளமான கேள்விகள் கேட்கப்பட்டன. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சங்கக்கரா, ‘பிக்சிங் நடந்ததாக கூறப்படும் போட்டியில் எனக்குதான் அதிக பொறுப்பு இருந்தது. அதுமட்டுமல்ல கிரிக்கெட் மீது எனக்கு மரியாதை உள்ளது. அதனால் நேரில் ஆஜராகி எனது தரப்பு விளக்கங்களை அளித்துள்ளேன். இந்த விசாரணையின் முடிவில் மகிந்தநந்தா சொன்ன குற்றச்சாட்டுகள் தொடர்பான உண்மைகள் உலகிற்கு தெரிய வரும் என்று நம்புகிறேன்’ என்று கூறியுள்ளார்.

Related Stories: