ரூ.1.76 லட்சம் கோடி போதாது ரிசர்வ் வங்கி கஜானாவுக்கு மீண்டும் ஆபத்து: உபரி நிதி மீது மத்திய அரசு மீண்டும் கண்

மும்பை: கடந்த ஆண்டு ரூ.1.76 லட்சம் கோடி உபரி பணத்தை ரிசர்வ் வங்கியிடம் இருந்து பெற்றது போல, இந்த ஆண்டு கொரோனா பாதிப்பு காலத்தை சமாளிக்க அதிக பணத்தை எதிர்பார்க்கிறது மத்திய அரசு. மத்திய அரசு நிதி தள்ளாட்டத்தின் போதும், பொருளாதார நிலை சரிவின் போதும் ரிசர்வ வங்கி தான் கைதூக்கி விடும். இது தான் நடைமுறை. எல்லா காலகட்டத்திலும் அவ்வப்போது இருந்த அரசுகள், ரிசர்வ் வங்கி உபரி வருவாய் நிதியில் இருந்து ஓரளவு பணத்தை வளர்ச்சி நிதிக்கு, பட்ஜெட் பற்றாக்குறைக்கு திருப்பி விட கேட்பதுண்டு. ஆனால், பாஜ அரசு காலத்தில் அதிகபணம் கேட்பது வாடிக்கையாகி விட்டது. அதற்கேற்ப, நிதி நிலை சீராக இல்லாததே காரணம். போதாக்குறைக்கு இப்போது இலவச ரேஷன் உட்பட பல்வேறு தொழில் துறைகளுக்கு கடன் தொகையை வழங்கியது காரணமாக 20 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக மத்திய அரசு செலவழித்து விட்டது. இதனால் கையில் பணம் இல்லாமல் பட்ஜெட் பற்றாக்குறையை கூட தீர்க்க முடியாமல் தீவிரமாக சிந்தித்து வருகிறது.

பொருளாதார நிலை படுபாதாளத்தில் சென்று விட்டது, சீன அத்துமீறல் காரணமாக எல்லையில் ராணுவத்தை பலப்படுத்துவது போன்ற செலவுகளும் அதிகரித்து வருகின்றன. வழக்கமாக அதிக உபரி வருவாயை எடுத்து தர கோரும் மத்திய அரசு, இப்போது ரிசர்வ் வங்கியிடம் இருந்து அதிக உபரி நிதியை எதிர்பார்க்கிறது. அப்போது தான் நிலைமையை சமாளிக்க முடியும் என்று நினைக்கிறது. இதனால், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மத்திய அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி உபரி நிதியை வழங்கிய ரிசர்வ் வங்கி, இப்போது பல வகையில் யோசித்து வருகிறது. காரணம், அதுவே, பொருளாதார நிலை தள்ளாட்டம், ரூபாய் மதிப்பு சரிவு போன்ற காரணங்களால் குழப்பத்தில் உள்ளது.

இதனால் எவ்வளவு பணம் உபரி நிதியாக கிடைக்கும்; அதில் எவ்வளவு மத்திய அரசுக்கு ஒதுக்குவது என்று தீவிரமாக பரிசீலித்து வருகிறது. ஏற்கனவே, கொரோனா பாதிப்பு காலத்தில் மத்திய அரசுக்கு உதவ கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து ஜூன் வரை மத்திய அரசு கடன் பத்திரங்களை ரூ.1.3 லட்சம் கோடி நிதியை அளித்து வாங்கியுள்ளது. ஆனால், இந்த நிதி மத்திய அரசுக்கு போதவில்லை. பட்ஜெட் பற்றாக்குறை நிதி எவ்வளவோ அதை விட அதிகமாக தேவை  என்று எண்ணுகிறது. கடந்த முறை ரிசர்வ் வங்கியிடம் மூலதன கையிருப்பு தொகை இருந்தது. மேலும், பிமல் ஜலான் கமிட்டி பரிந்துரைப்படி மத்திய அரசுக்கு உபரி வருவாய் நிதியை ரிசர்வ் வங்கி ஒதுக்கியது. இந்த முறை ஏற்கனவே, கடன் பத்திரங்களை அதிகமாக வாங்கிவிட்டது; மேலும், கொரோனா பாதிப்பு காலத்தில் நிலைமை மோசமாக உள்ளதால் மத்திய அரசின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.

* ரிசர்வ் வங்கி தவிப்பு

சமீப காலமாக ரிசர்வ் வங்கியின் நிலை மிகமோசமாக உள்ளது. வங்கிகள் வராக்கடன், வாங்கிய கடனுக்கு வட்டி நிலுவை என்று பல வகையில் நிலை சீராகவில்லை.

ரூபாய் மதிப்பு தொடர்ந்து சீராகவே இல்லை; கடுமையாக சரிந்தவண்ணம் உள்ளது.

ஏற்றுமதி குறைந்து, இறக்குமதி அதிகரிக்க வேண்டிய நிலையில், அன்னிய செலாவணி வருவாய் கையிருப்பும் குறைந்து விட்டது.

உள்நாட்டு உற்பத்தி சரிவு, பொருளாதார வளர்ச்சி விகிதம் பூஜ்யத்துக்கு கீழ் போய்விடுமோ என்ற அச்சம் எல்லாம் சூழ்ந்து கிடக்கிறது.

கடந்த ஏப்ரல் மாதம், ரிசர்வ் வங்கி, நிதி பற்றாக்குறை, பொருளாதார சரிவை சமாளிக்க ரூபாய் நோட்டை கூடுதலாக அச்சடிக்கலாமா என்று யோசிப்பதாக தகவல்கள் வந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: