சென்னை, திருச்சி உள்பட முக்கிய வழித்தடங்களில் ஓடும் 224 ரயில்களை தனியாரிடம் விற்க முடிவு: 18,000 தொழிலாளர் வேலை இழக்கும் அபாயம்

* லாபத்தில் உள்ளதை தாரைவார்ப்பது ரயில்வே துறையை சீரழிக்கும் நடவடிக்கை

* தொழிற்சங்கம் பரபரப்பு குற்றச்சாட்டு

திருச்சி: இந்தியாவில் முக்கிய வழித்தடங்களில் ஓடும் 224 ரயில்களை ஏலம் விட மத்திய அரசு முடிவு ெசய்து, அதற்கான அறிவிப்பு ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம் 18,000 தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களை தனியாரிடம் தாரை வார்க்கும் வேலையில் மும்முரமாக இறங்கி உள்ளது. குறிப்பாக, ரயில்களை தனியாரிடம் விற்கும் பணிகளை தீவிரமாக செய்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனா வேகமாக பரவி வரும் இந்த சூழ்நிலையிலும் ரயில்கள் விற்பனைக்கான ஏல அறிவிப்பை கடந்த 1ம் ேததி ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ளது. ஆன்லைன் மூலம் (இ கொள்முதல் போர்டல்) வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பில், ரயில்களை ஏலம் எடுக்க விரும்பும் நிறுவனங்கள் 2 மாதத்துக்குள் ஆன்லைனிலேயே விண்ணப்பிக்க வேண்டும். அதன்பிறகு ஏலம் நடைபெறும்.

சண்டிகர், சென்னை, டெல்லி (2), அவுரா, ஜெய்ப்பூர், மும்பை (2), பாட்னா, பிரயாக்ராஜ், பெங்களூரு, செகந்திராபாத் என 12 தொகுப்புகளாக பிரித்து விலை நிர்ணயம் செய்து தனித்தனியாக ஏலம் விடப்பட உள்ளது. 100 வழித்தடங்களில் ஓடக்கூடிய மொத்தம் 224 ரயில்கள் ஏலத்தில் இடம் பெற்றுள்ளது. பல்லவன், வைகை, கொச்சுவேலி, கன்னியாகுமரி, நெல்லை, புதுச்சேரி- செகந்திராபாத், சென்னை- கோவை, கொச்சுவேலி- கவுகாத்தி, சென்னை- மும்பை, சென்னை-மங்களூர், சென்னை-டெல்லி, திருநெல்வேலி- கோவை விரைவு ரயில்கள் உள்பட மொத்தம் 24 ரயில்கள் சென்னை தொகுப்பில் ஏலம் விடப்பட இருக்கிறது. இந்திய அளவில் தமிழக தொகுப்பு ரயில்கள் தான் அதிக விலைக்கு, அதாவது ₹3221 கோடிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சர்வதேச ஏலமாக இது நடைபெற உள்ளது. இந்திய நிறுவனங்கள் மட்டுமின்றி ஸ்வீடன், ஜப்பான், சீனா, ஜெர்மன் நாட்டு நிறுவனங்கள் பங்கேற்க கூடும்.

ரயில்களை தனியாரிடம் விற்கும் மத்திய அரசின் இந்த முடிவுக்கு ரயில்வே தொழிற்சங்கம் மற்றும் பயணிகள் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதன்மூலம் 18,000 தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்படும் என்றும் அவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். இதுபற்றி தட்சிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் துணைப் பொதுச் செயலாளர் மனோகரன் கூறியதாவது: 12 தொகுப்புகளிலும் ஒவ்வொரு நிறுவனங்கள் ஏலம் எடுக்கும். மேலும் ஏலம் எடுக்கும் நிறுவனங்களே கட்டணங்களை நிர்ணயிக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. கட்டணத்தை தாறுமாறாக ஏற்றினால் கூட, அதுபற்றி யாரும் கேள்வி கேட்க முடியாது.

மேலும், கார்டுகள் பயன்படுத்த வழிவகை, இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம், ரயில்வே கவுண்டர்களில் முன்பதிவிற்கு அனுமதி, தனி மென்பொருள் மூலம் கணக்குகள் பராமரிப்பு, 16 முதல் 24 பெட்டிகள் கொண்ட சொகுசு ரயில்களாக இயக்க அதிகாரங்கள் வழங்கப்பட உள்ளது. இதுதவிர பார்சல் மற்றும் லக்கேஜ் கட்டணம், பெட்டிகளில் விளம்பர உரிமை, ரயில்வே யார்டுகளில் பராமரிப்பு, அனுமதி என ஏல சரத்தில் பல அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன்மூலம் ரயில்கள் மற்றும் நிலையங்களின் டிக்கெட் பரிசோதகர்கள், ஏ.சி. மெக்கானிக்குகள், டிரைவர்கள், கார்டுகள், பெட்டிகள் இணைப்பு, பராமரிப்புகளில் ஈடுபடும் மெக்கானிக்குகள், மின்சாதன பிட்டர்கள், மேற்பார்வையாளர்கள் என சுமார் 18,000 ரயில்வே ஊழியர்கள் உடனடி வேலை இழப்பார்கள்.

தனியார் ரயில்களில் பயணச் சலுகைகள் இடம்பெறாது. ஆண்டுக்கு 8.88 கோடி பேருக்கு முன்பதிவு உறுதியாவதில்லை. இதை குறைக்க கூடுதல் ரயில்களை இயக்கி இருக்க வேண்டும். அதை மத்திய ரயில்வே அமைச்சகம் செய்யவில்லை. ரயில்களில் கூட்டம் இருப்பதை காரணம் காட்டி, அதிக விலைக்கு ஏலம் விடவே, இவ்வாறு ரயில்கள் இயக்கப்படாமல் இருந்துள்ளது. லாபத்தில் இயங்கும் முக்கிய வழித்தட ரயில்களை தனியாரிடம் விற்பது ரயில்வே துறையை சீரழிக்கும் நடவடிக்கை. இதை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related Stories: