தந்தை-மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 3 காவலர்களும் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தனர்: சிபிசிஐடி வட்டாரம் தகவல்!

சாத்தான்குளம்: தந்தை-மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 3 காவலர்களும் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாக சிபிசிஐடி வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரி ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் கொல்லப்பட்ட சம்பவத்தில், ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன், காவலர் முருகன் ஆகியோர் சிபிசிஐடி போலீசாரால் நேற்று கைது செய்யப்பட்டனர். கைதான இவர்கள் 3 பேரிடமும் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தியபோது அவர்கள் மிகுந்த மன அழுத்தத்துடன் காணப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைதானவர்களை ஏன் இந்த அளவுக்கு தாக்கினீர்கள்? என்ற கேள்விக்கு, சாதாரண கைதிகளை போல தான் தாக்கினோம் என்றும், உயிரிழப்பு வரை செல்லும் என எதிர்பார்க்கவில்லை என்று கூறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உதவி ஆய்வாளராக இருந்த பாலகிருஷ்ணன், மிகவும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர் என்றும், இனி தன் குடும்பத்தின் நிலை என்னவாகும் என எண்ணி விசாரணையின் போது கலங்கிய நிலையில், அவர்கள் 3 பேரையும் சிபிசிஐடி போலீசார் ஆசுவாசப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. மேலும் அவர்கள் 3 பேரும் தங்கள் குடும்பத்தினரை சந்திக்க அனுமதி கேட்டதன் பேரில் அதற்கான ஏற்பாடும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் 3 பேருமே சிறைக்கு கொண்டு  செல்லப்படும் வரை மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாக சிபிசிஐடி வட்டாரங்க தகவல் தெரிவித்துள்ளன. இச்சம்பவத்தில் ஏற்கனவே உதவி ஆய்வாளர் ரகு கணேஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: