திசையன்விளையில் வாகன சோதனையில் போலீஸ் எஸ்ஐ நண்பர்களுடன் சேர்ந்து அத்துமீறல்

திசையன்விளை: திசையன்விளையில் வாகன சோதனையில் ஈடுபட்ட சீருடை அணியாத எஸ்ஐ, நண்பர்களுடன் சேர்ந்து பைக்கில் வந்த வாலிபரை தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நெல்லை மாவட்டம், திசையன்விளை மெயின்பஜார், உடன்குடி ரோட்டில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபடுவது வழக்கம். வாகன சோதனையை ஊருக்கு வெளியே நடத்தினால் தங்கள் வியாபாரம் பாதிக்காது என்று வியாபாரிகள் சங்க தலைவர் டிம்பர் செல்வராஜ்,  இன்ஸ்பெக்டர் ஜூடியிடம் மனு அளித்திருந்தார். இருப்பினும் போலீசார் மெயின் பஜாரில் வாகன சோதனையில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் கடந்த மாதம் 17ம் தேதி திசையன்விளை ஐஓபி வங்கி எதிரில் எஸ்ஐ ஒருவர் சீருடையின்றி வாகன சோதனையில் ஈடுபட்டதாக தெரிகிறது. அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த வாலிபரை எஸ்ஐ மறித்தபோது அவர் நிற்காமல் சென்றுள்ளார். இதையடுத்து அந்த வாலிபரை மடக்கிப் பிடித்த எஸ்ஐ, போலீஸ் நிறுத்தியும் நிறுத்தாமல் செல்வதா எனக்கூறி சரமாரியாக தாக்கினார். தன்னை தாக்குவது போலீஸ் என்று தெரியாததால் வாலிபரும் பதிலுக்கு தாக்கினார். அப்போது எஸ்ஐயுடன் வந்த பெண் காவலரின் கணவர் காரில் இருந்த லத்தியை எடுத்து வாலிபரை சரமாரியாக தாக்கினார். மேலும் எஸ்ஐயின் நண்பர்களும் சேர்ந்து அந்த வாலிபரை தாக்கினர்.

அவர்களில் ஒருவர் பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர் மட்டுமின்றி குண்டர் சட்டத்தில் சிறை சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்தை செல்போனில் ஒருவர் படமெடுப்பதை கவனித்த எஸ்ஐயின் நண்பர், செல்போனை பறித்து உடைத்தார். அவருக்கு புதிய செல்போன் வாங்க எஸ்ஐ ரூ.10 ஆயிரம் கொடுத்தது வேறு கதை. இதற்கிடையில் பைக்கில் வந்தவரை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றும் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் நடந்த 3 நாட்களுக்கு பின் ஜூன் 20ம் தேதி வாகனத்திற்கான ஆவணங்கள் இல்லை என்று கூறி அபராதம் பெற்றுக் கொண்டு அனுப்பி விட்டனர்.

எஸ்ஐ சீருடையின்றி வாகன சோதனை நடத்தியதுடன், பைக்கில் வந்தவரை தாக்கியது சரியா? அவருடன் வந்த பெண் காவலரின் கணவருக்கு லத்தியால் அடிக்க உரிமை கொடுத்தது யார்?, பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய குண்டர் சட்டத்தில் கைதானவர் போலீசுடன் இணைந்து எப்படி தாக்கலாம்?, எஸ்ஐ மீது துறை ரீதியாக நடவடிக்கையும், தாக்குதலில் ஈடுபட்ட போலீஸ் அல்லாதவர்கள் மீது குற்ற வழக்கும் பதிவு செய்யப்படுமா? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். ஏற்கனவே சாத்தான்குளம் சம்பவம் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த வீடியோ சமூகவலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

Related Stories: