பாய்லர் வெடித்து பலியான 6 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.1 கோடி நிவாரணம் கோரி என்எல்சியில் உறவினர்கள் முற்றுகை: 840 மெகாவாட் மின்உற்பத்தி பாதிப்பு

நெய்வேலி: கடலூர் மாவட்டம் நெய்வேலியில் மத்திய அரசின் என்எல்சி இந்தியா நிறுவனம், மூன்று நிலக்கரி சுரங்கங்கள், 5 அனல் மின் நிலையங்களை கொண்டு இயங்கி வருகிறது. இங்கு 23 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.  இந்நிலையில் நேற்று முன்தினம் காலை முதல் ஷிப்ட்டில் 2 ஆயிரம் பேர் பணியில் இருந்தனர். அப்போது அங்குள்ள 5வது யூனிட்டில் உள்ள பாய்லர் வெடித்து வெங்கடேச பெருமாள்(28), சிலம்பரசன் (25), பத்மநாபன்(28), அருண்குமார்(27), நாகராஜ் (36), ராமநாதன்(46) ஆகிய ஒப்பந்த தொழிலாளர்கள் 6 பேர் உடல் கருகி இறந்தனர்.

உயிருக்கு போராடிய 17 பேர் சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். உயிரிழந்த 6 பேர் குடும்பத்துக்கு தலா ரூ. 1 கோடி நிவாரணத்தொகையும், ஒருவருக்கு நிரந்தர வேலையும் வழங்க வேண்டுமென அனைத்து தொழிற்சங்கத்தினர் போர்க்கொடி தூக்கி உள்ளனர். இந்நிலையில் நேற்று ஒப்பந்த மற்றும் நிரந்தர தொழிலாளர்கள் சிலரை தவிர மற்றவர்கள் பணிக்கு செல்லாததால் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டது. விபத்து ஏற்பட்ட 2வது அனல்மின்நிலையத்தில் 4, 5, 6 மற்றும் 7வது யூனிட்களில் 840 மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இது தற்காலிகமானது என்றும், விரைவில் சரி செய்யப்படும் என நிர்வாகம் தரப்பில் கூறப்படுகிறது.

Related Stories: