சுள்ளன் ஆற்றில் கட்டப்படும் வண்டிப்பாலம் பணிகள் விரைந்து முடிக்கப்படுமா? 2 கிராம மக்கள் எதிர்பார்ப்பு

வலங்கைமான்: வலங்கைமான் அடுத்த ஆதிச்சமங்கலம் கிராமத்தில் சுள்ளன் ஆற்றில் கட்டப்பட்டு வரும் வண்டிப்பால பணியினை ஆற்றில் தண்ணீல் வரும் முன் பணிகளை விரைந்து முடித்து இவ்வாண்டிலேயே பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அடுத்த ஆதிச்சமங்கலம் கிராமத்திற்கும், அதே ஊராட்சியை சேர்ந்த வேதாம்பரை கிராமத்தையும் இணைக்கும் விதமாக சுள்ளன் ஆற்றில் சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட சிறிய நடைபாலம் முற்றிலும் பழுதடைந்ததால் புதிய வண்டிப்பாலம் கட்டித்தர வேண்டுமென பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

அதையடுத்து ஊரக வளர்ச்சித்துறை மூலம் சுள்ளன் ஆற்றில் சுமார் 40மீ நீளம், ஏழரை மீட்டர் அகலத்துடனும் ஐந்து கண்வாய்களுடன் நபார்டு திட்டத்தின்கீழ் ஒரு கோடியே 48 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பீட்டில் பாலம் கட்ட கடந்த ஆண்டு நிர்வாக அனுமதி பெறப்பட்டு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாலப் பணிகள் துவங்கியது. இதில் பாலத்தின் அடித்தளம் மட்டுமே அமைக்கப்பட்டது. அப்போது ஆற்றில் தண்ணீர் வந்ததால் நிறுத்தப்பட்டது. அதன்பின்னர் இவ்வாண்டு கடந்த சில மாதங்களுக்கு முன் மீண்டும் பாலப் பணிகள் துவங்கியது.

தற்போது பில்லர்கள் கட்டும் பணி முடிவுற்றுள்ளது. பாலம் கட்டும் பணி ஆற்றில் தண்ணீர் வருவதற்குள் முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. எனவே பாலம் கட்டும் பணியை விரைந்து முடித்து இந்த ஆண்டிலேயே மக்கள் பயன் பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: